Ads Area

“அவர் ஒரு முஸ்லீம்... அது மட்டும் எனக்கு தெரியும்” கொரோனா ஏற்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்.

மா.நிருபன் சக்கரவர்த்தி

கொரோனாவை பற்றி ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கேட்டால் பக்கம், பக்கமா பல அனுபவத்தை பகிர்வார்கள். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியில் இன்று கொரோனாவால் தாங்கள் சந்தித்த நெருக்கடிகள் என்ன என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, அதற்கு பெண்மணி ஒருவர் பதில் கூறும் வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

அதில் அப்பெண்மணி, எனக்கு கொரோனா வந்தபோது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். சில நாள்லயே எனக்கு ஆக்சிஜன் அளவு ரொம்ப குறைந்திருச்சு, ஒரு கட்டத்துல ஆக்சிஜன் அளவு 92 ஆகிருச்சு, மருத்துவமனைக்கு செல்ல Cab புக் செய்ய முயற்சி செஞ்சேன் ஆனா யாரும் கொரோனா நோயாளி என்பதால் வர மறுத்து விட்டனர். கடைசியா ஒரே ஒருத்தர் மட்டும் நான் கண்டிப்பாக வருகிறேன் அம்மா என கூறி வந்தார். அவரே ஒவ்வொரு மருத்துவமனையாக இறங்கி சென்று இடம் காலியாக உள்ளதா என விசாரிக்கவும் செய்தார்.

ஒரு கட்டத்தில் ஒரு மருத்துவமனையில் என்னை சேர்த்தும் விட்டார். நான் சென்ற சில மணி நேரத்திலே என் அருகில் ஒருவர் மரணம் என்னை கலங்க வைத்தது. என் கண் முன்னே மரணத்தை பார்ப்பது அதுவே முதல்முறை என்றார். சற்று தாமதமாகி இருந்தால் நானும் மரணித்திருப்பேன் எனவும் நான் மீண்டு வந்த பிறகு பல முறை அந்த Cab ஓட்டுனருக்கு தொலைபேசியில் அழைத்தேன் ஆனால் அவர் எடுக்கவில்லை.

நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கிட்டு அவர் எப்படி இருந்தார்? என கேட்க அந்த பெண்மணி அவருக்கு ஒரு 35வயது இருக்கும் எனவும் அவர் ஒரு முஸ்லீம் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் என்றார் (அப்பெண்மணி இந்து மதத்தை சார்ந்தவர்).

மீண்டும் தொகுப்பாளர் வந்தது யார் என நினைக்கிறீர்கள்? என கேட்க, அதற்கு அப்பெண்மணி ‘கடவுள்’ தான் சார் வந்தார் என கூற அரங்கமே கைதட்டுகிறது.

மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா, இதயம் தாண்டி இறைவன் இல்லை வா என்ற யுகபாரதி வரிகளை போல, கொரோனா ஆயிரத்தை எடுத்துச்சென்றாலும் மனிதநேயத்தை மக்களிடம் ஆழமாக விதைத்துவிட்டு சென்றுள்ளது.

கொரோனா எடுத்து சென்றது ஏராளம். கற்று தந்தது பல்லாயிரம்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe