சம்மாந்துறை பிரதேச சபையின் ஊடக அறிக்கை
நூர்ப்பள்ளி வாசலுக்கு அருகாமையில் செல்லும் வடிகான் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஒருவரின் பதிவு தொடர்பாக பிரதேச சபை என்ற வகையில் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது. குறித்த வடிகான் அல்-மர்ஜான் பாடசாலையில் பின்புறமாக தொடங்கி நூர்ப்பள்ளிக்கு அருகாமையில் சென்று வீரமுனை சேகப்பத்து வட்டையில் முடிவடையும் நீண்ட தூர சுவானியர் ஆரைப்பத்தை என அழைக்கப்படும் வடிகான் ஆகும்.
குறித்த வடிகான் சபை ஊழியர்களினால் 03 மாதத்துக்கு ஒரு தடவையும், தேவைக்கேற்பவும் துப்பரவு செய்யப்படுவதை வடிகானுக்கு அயலிலுள்ள பொதுமக்கள் அறிவார்கள். இருப்பினும் குறித்த வடிகான் ஒரு காலமும் துப்பரவு செய்யப்படவில்லை என்ற மாயயை உருவாக்கி அதிகாரமுள்ள நிறுவனத்துக்கெதிராக சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டிருப்பது நம்பிக்கையாளர் சபை உறுப்பினரின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
குறித்த வடிகானில் காணப்படும் பிளாஸ்ட்ரிக் போத்தல்கள், தோட்டக் கழிவுகள், பொலித்தீன் பைகள், மட்டைகள் என்பன பிரதேச சபையினால் இவ் வடிகானில் இடப்படுவதில்லை. அயலில் வசிக்கும் மக்களினாலேயே குறித்த வடிகானில் இக் கழிவுகள் வீசப்பட்டு மாசுபடுத்தப்படுகின்றது.
மேலும் பகல், இரவு வேளையில் கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மலசல கழிவுகள் திறந்து விடப்படுவதுடன், பெம்பஸ் மற்றும் கழிவுகளும் மழை வெள்ளத்தின் போது வடிகானில் வீசப்படுகின்றன. இவ்வாறு வீசப்படும் கழிவுகள் நீரோடாத பகுதியில் தேங்கி நிற்கின்றது.
ஊழியர் பற்றாக்குறை, வாகன பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்று காலத்திலும் கூட எமது ஊழியர்களினால் அர்பணிப்புடன் கழிவு முகாமைத்துவம் முன்னெடுக்கப்படுவதை பொதுமக்கள் ஆகிய நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
தற்போது அத்தியவசிய சேவையாக கழிவு முகாமைத்துவம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரதேச சபையினால் 2018ம் ஆண்டு தொடக்கம் உக்கக் கூடிய கழிவுகள், உக்காத கழிகள் என தரம் பிரித்து வழங்குமாறு பொது மக்களிடம் பல முறை விழிப்புணர்வு செய்த போதிலும் இற்றை வரைக்கும் அதனை வழங்குவதற்கும் தயாரில்லாத நிலையில் சில மக்கள் உள்ளனர்.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் முறைகேடான பதிவுகள் இடுவதை தவிர்த்து மல்கம்பிட்டி வீதி வாப்பாட மடு, மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் - வண்டு வாய்க்கால் பிரதேசம், கோரக்கர் கோயில் பிரதேசம், முஹைதீன் மாவத்தை பிரதேசம், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் பின் பக்க அலவக்கரை பிரதேசம், ஆண்டிட சந்தி போன்ற பிரதேசங்களில் இரவு வேளையில் கழிவுகளை வீசுவதை சில பொதுமக்கள் மற்றும் சில வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி சுற்றாடல் சீர்கேடுகளை தவிர்ப்பது மத ரீதியான நிறுவனங்களின் கடமையாகும். இவ்வாறன பதிவுகளை சமூக வலைத்தளத்தில் இடுவதை தவிர்த்து பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் செய்தால் அது சிறப்பாக அமையும்.
சுத்தம் ஈமானின் பாதி என்று கூறப்பட்ட எமது மார்க்கத்தில் பாதையில் கிடக்கும் பாதசாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்தக் கூடிய சிறிய கல்லை கூட அகற்றுவது தர்மம் என கூறப்பட்ட போதிலும் இந்த விடயத்தில் மத ரீதியான அமைப்புகளில் இருப்பவர்கள் ஏன் சமூக பொறுப்புடன் நடந்து கொள்கின்றார்கள் இல்லை என்பது கவலையளிக்கின்றது.
ஊடகப் பிரிவு
சம்மாந்துறை பிரதேச சபை
சம்மாந்துறை
2021.07.28