நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 12 மில்லியன் ரூபாய்கள் செலவில் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் திங்கட்கிழமை (16) நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்ஷார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் ஆரம்பக்கட்டமாக தற்போது இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் (Geo bag) மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஜியோ பேக் (GeoBag) பைகளில் மண் இட்டு நிரப்பி கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கரையோரம் திணைக்களத்தினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிந்தவூரில் இடம்பெற்று வரும் தீவிர கடலரிப்பை பரீட்சிப்பதற்காக தன்னுடைய வேண்டுகோளை ஏற்று கடந்த ஜூலை 24 அன்று நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் பொறியியலாளர் றிபாஸ் ஆகியோர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இவ்விஜயத்தின் போது குறித்த இடத்திலேயே கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் சுஜீவ ரணவக அவர்களுடன் நடைபெற்ற தொலைபேசிக் கலந்துரையாடலை தொடர்ந்து கொழும்பு கரையோர திணைக்கள அலுவல உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்புகளை அடுத்து மேற்கூறப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் தெரிவித்தார். இந்த ஆரம்பகட்ட வேலைகளின் தொடக்க நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.