லாகூர்: பாகிஸ்தானில் நடந்த சுதந்திர தின விழாவை, 'வீடியோ' எடுக்கச் சென்ற இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்திய, 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஆசாதி சவுக் பகுதியில் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, 14ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அப்போது அவர்களில் சிலர், ஒரு இளம்பெண்ணை துாக்கி வீசுவதுடன், அவரின் உடைகளை கழற்றியும், கிழித்தும் கொடுமைப்படுத்தும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. இதில் உரிய நடவடிக்கை தேவை என, சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது: எங்கள் 'யு டியூப்' சேனலுக்காக சுதந்திர தின விழாவை பதிவு செய்ய சென்றோம். இளைஞர்கள் என்னை கிண்டல் செய்ததுடன், ஒன்றுகூடி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் துவங்கினர். இதனால் அருகில் உள்ள பூங்காவிற்குள் சென்றேன்.
அங்கும் வந்து ஆடைகளை கிழித்ததுடன், என்னை மேலே துாக்கிப் போட்டு விளையாடினர். எங்கள் குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தினர். என் மொபைல் போன், 1.50 லட்சம் ரூபாய் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக, 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.