மாளிகைக்காடு நிருபர்.
தற்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரானா தொற்றினால் நாளுக்கு நாள் ஒருவர் பின் ஒருவராக மரணித்துக் கொண்டிருப்பதனால் மக்களின் அன்றாடம் மிகவும் கவலையோடும், கண்ணீரோடும் கழிந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணின் சமகாலம் தொடர்பில் நாம் எல்லோரும் இணைந்து தியாகங்களோடும், விட்டுக்கொடுப்புக ளோடும் தாமதங்கள் இல்லாத தீர்மானங்களை எடுத்து எமது உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்காக நாம் எல்லோரும் துணிச்சலோடு களமிறங்கி பணிபுரிய வேண்டியிருக்கிறது என அக்கரைப்பற்று நகருக்கான கொவிட்-19 தடுப்புச் செயலணி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கொவிட்–19 தடுப்பு செயலணிக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ தளபதி, அக்கரைப்பற்று வர்த்தக சங்கம் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும்.
களப்பணி தொடர்பாகவும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் 'டெல்டா' திரிபு தொடர்பிலும் கடந்த திங்கட்கிழமை அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற முக்கிய அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய பின்வரும் நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடற்கரை, ஆற்றங்கரை, போன்ற பொது இடங்களில் கூடுவதும், குடும்பத்தோடு கூட்டாகச் சென்று குதூகலம் காண்பதும் (நீத்தை, ஆலம்குளம், சம்பு நகர்) மறு அறிவித்தல்வரை தடை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு அடிக்கடி இராணுவத்தினரின் சுற்றிவளைப்பும் சுகாதார பிரிவின் பீ.சீ.ஆர். பரிசோதனையும் கண்டிப்பாக நடைபெறும். திருமணம், வலீமா போன்ற சகல நிகழ்வுகளும் 25 பேருடன் மட்டுப்படுத்தப்படுவதோடு, கலந்து கொள்ளும் அனைவரது தகவல்களும் கிராம சேவை உத்தியோகத்தரினால் பதிவு செய்யப்படுவதுடன் பொதுசுகாதார பரிசோதகர்களினாலும், உள்ளுராட்சி மன்றங்களினாலும் மேற்பார்வை செய்யப்படும்.
கொழும்பு நகரில் காணப்படும் அபாயகரமான சூழல் காரணமாக கொழும்பிலிருந்துஅக்கறைப்பற்றுக்கு வருபவர்கள் தொடர்பில் முழு விபரங்கள் பதிவு செய்யப்பட்டு ஊரில் இடப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு பின்னர் கொழும்பிலிருந்து வந்தவர்கள் ஒவ்வொருவரும் பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை நடாத்துவதோ அல்லது ஜனாஸா அறிவித்தல்களைச் செய்வதோ கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களுக்கு ஐங்காலத் தொழுகைக்காக வருபவர்களின் எண்ணிக்கையில் மட்டுப்படுத்தல் பேணப்படுவதோடு, முகக்கவசம் அணிவதிலும், ஏனைய சுகாதார விதிமுறைகளை பேணுவதிலும் கூடிய கவனெமெடுப்பதுடன் இதற்கு நிர்வாகத்தினரே பொறுப்புக்கூறக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். கொரோனாக் களம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதனால் மேற்படி கட்டுப்பாடுகளை பொது மக்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில், அக்கறைப்பற்றை முழுமையாக முடக்கி மக்களின் பொருளாதாரம் பலப்பரீட்சைக்கு உட்பட்டு அதனால் ஏற்படும் வறுமைப் பெறுபேறுகளை வாழ்நாள் முழுவதும் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டு வைக்க வேண்டி ஏற்படும் என்பதனை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அறிவித்துள்ளனர்.