Ads Area

ஆசிரியர் மீதான அடக்குமுறையினால் சிறிமா ஆட்சி கவிழ்ந்ததை தற்போதைய அரசாங்கம் மறந்து விட்டதா?

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தை குதிரைப் படை வீரர்களைக் கொண்டு அடக்க முயற்சித்ததன் விளைவாக 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்து, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்த வரலாற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் ஏ.எல்.முகம்மத் முக்தார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

அரச துறையில் மிகக் கூடிய எண்ணிக்கையானோர் ஆசிரியர்களாவர். ஆசிரியர்கள் நினைத்தால் ஆட்சியையும் மாற்ற முடியும். பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 46 இலட்சம் மாணவர்களின் தலைவிதி இவ்வாசிரியர்களிடமே உள்ளது.

ஒரு ஆசிரியர் பெறுகின்ற 35,000 முதல் 45,000 ரூபா வரையான சம்பளத்தின் மூலம் அன்றாட செலவைக் கூட ஈடுசெய்ய முடியாது அந்தரப்படுகின்றனர். குரு செத எனும் கடனை ஆசிரியர்களே அதிகமாக பெறுவதையும் காண்கிறோம்.

ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராட்டத்தை நடாத்துகிறார்கள். அவர்களது நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கழிக்கும் விதத்தில், நையாண்டி பண்ணும் விதத்தில் அமைச்சர்கள் சிலர் செயற்படுவது ஏற்புடையதல்ல.

அரசாங்கத்திடம் பணம் இல்லையென கூறப்படுகிறது. ஆனால் பணம் இல்லாத நிலையில் கமிசன் வழங்கும் வீதி அபிவிருத்தி, பாலம் அமைப்பு போன்றவை தாராளமாக இடம்பெறுகிறன. இதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது.

அண்டை நாடான இந்தியாவில் கொரோரா காரணமாக 02 ஆண்டுகளுக்கு சகல அபிவிருத்தி வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு எம்.பி.க்களுக்கான அபிவிருத்தி நிதியையும் நிறுத்தி, மக்களது தேவைக்கு முன்னுரிமை அளிக்கபட்டுள்ளது. ஆனால் இலங்கை அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இது கொள்கை வகுப்பாளர்கள் விடும் பாரிய தவறாகும்- எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe