(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், இத்தாக்கத்தால் ஒரே நாளில் ஐவர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அபாய நிலைமையைக் கவனத்தில் கொண்டு கொவிட் கட்டுப்பாட்டுக்கான சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது விடயமாக அவர் நேற்று (04) ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகப் பிரிவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வீதம் அதிகரித்து வருகின்றது.
நேற்று முன்தினம் புதன்கிழமை (04) 81 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களுள் ஆகக்கூடிய தொற்றாளர்கள் கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவில் இருந்து 21 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நிந்தவூர் சுகாதாரப் பிரிவில் 13 பேரும் பொத்துவில் சுகாதாரப் பிரிவில் 09 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் ஒரே நாளில் ஐவர் உயிரிழந்திருக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4150 ஐக் கடந்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டிருக்கிறது என்பதால் நாட்டில் கொரோனா தாக்கம் குறைந்து விட்டது என்பது அர்த்தமல்ல. ஆனால் படித்தவர்கள், பாமரர்கள் என்று எல்லோருமே பொறுப்பின்றி நடந்து கொள்கின்றனர்.
ஆகையினால், கல்முனைப் பிராந்தியத்தில் இனிமேல் முகக்கவசம், சமூக இடைவெளி, கைச்சுத்தம் போன்ற சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக மேற்பார்வை செய்யப்படும்.
அனைவரினதும் பாதுகாப்புக் கருதி அனைவருமே மாஸ்க்கை சரியாக அணியுங்கள். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள். மீறுவோர் மீது எமது நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும்.
அத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாய விடயமாக செயற்படுத்தப்படும். தடுப்பூசி போடாதவர்கள் அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எமது பிராந்தியத்தில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாத வைத்தியரும் அவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் தாய் தந்தையருமாக அவரது குடும்பத்தில் ஆறுபேர் கொரோணா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இது தடுப்பூசி மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கல்முனைப் பிராந்தியத்தில் எமது சுகாதார நடவடிக்கைகளை யாராவது சவாலுக்கு உட்படுத்தினால் நேரடியாக முகம்கொடுக்க நான் தயார். அரண்மனை பற்றி எரிகின்றபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போன்று பலர் காணப்படுகின்றனர். எவ்வாறாயினும் நாங்கள் கடமையில் இருந்து பின்வாங்க மாட்டோம்- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.