Ads Area

இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோர் இனியும் தாமதியாமல் அவசரமாக அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

எமது நாட்டில் கொரோனா வைரஸ் வீரியமடைந்து தீவிரமாக பரவி வருகின்ற அபாய சூழ்நிலையில், பொது மக்கள் மிகவும் பொறுப்புணர்வோடு சுயகட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எமது நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றாளர்களினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டெல்டா பிறழ்வடைந்த வைரஸ் கூட நாடு பூராவும் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். எமது அம்பாறை மாவட்டத்திலும் டெல்டா தொற்றுக்குள்ளான சிலர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

தலைநகர் கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளில் கட்டில்கள் இன்றியும் இட வசதியின்றியும் கொரோனா தொற்றாளர்கள் அங்கும் இங்குமாகக் கிடந்து அவஸ்தைப்படுகின்ற அவலங்களை ஊடகங்கள் வாயிலாக கண்டுகொண்டிருக்கின்றோம். கொரோனா தொற்றாளர்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஒட்ஸிசனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்கையில் கடந்த சில நாட்களாக கல்முனைப் பிராந்தியத்திலும் கொரோனா தொற்று வீதமும் மரணிப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். இதுவரை இப்பிராந்தியத்தில் 100 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் தொற்று வீதம் இந்த நிலையில் தொடருமாயின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும். எமது பகுதியிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்களுக்கு போதிய கட்டில் வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர்.

கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத அரக்கன் உயிர்களை வகை தொகையின்றி காவு கொண்டு வருகின்ற இந்த அபாய சூழ்நிலையை சமாளிக்க முடியாமல், உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி நிற்கின்ற அரசாங்கம், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்துதம்மைப் பாதுகாக்கும் என பொது மக்கள் எவரும் நம்பத் தேவையில்லை.

ஆகையினால், இந்த அபாய நிலையை உணர்ந்து, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, அவரவர் சுயமாக சுகாதார கட்டுப்பாடுகளைப் பேணி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை மாநகர வாழ் மக்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

முடியுமானவரை வீடுகளில் இருந்து கொள்ளுங்கள். வேலைத் தலங்கள், சந்தைகள் மற்றும் கடைகளுக்கு செல்வோர் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். தேவையின்றி வெளியில் செல்வதையும் கடற்கரை, கடைத்தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவதையும் மரண வீடுகளுக்கு செல்வதையும் திருமண வைபவங்கள் மற்றும் விழாக்களில் பங்குபற்றுவதையும் முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோர் இனியும் தாமதியாமல் அவசரமாக அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்- என்று கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe