பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டோமேயானால், தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும் என்று, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாட்டுக்குள் தற்போது, “டெல்டா” வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமையை, சுகாதாரத் தரப்பினர் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பான கோரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, அனைவரும் முன்வர வேண்டும். அதனை விடுத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்துகொண்டு, ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலைமையையே இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறாக, ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருப்பதால், இந்த வைரஸ் தொற்றுப் பரவல் நிலை தடுக்கப்படப் போவதில்லை. மாறாக தொற்று மேலதிகமாக பரவலடைந்து,பாதிப்புகளை உள்ளாக்கி வருகின்றது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமையில், நாட்டை முடக்குவதென்பது ஒரு முக்கிய வழி என்கின்ற போதிலும், அவ்வாறு நாட்டை முடக்குவதால், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரப்போவதில்லை. சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் மாத்திரமே முழுமையாக கொரொனா தொற்றுப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கொரோனா வைரஸானது, வேறு வேறு வீரியங்களில், குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டை முடக்குவதாயின், இன்னும் 4 வருடங்களுக்கு தொடர்ந்து நாட்டை முடக்க முடியுமா என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி இருக்கும் பட்சத்தில், நாம் அனைவரும் சிந்தித்துத்துச் செயற்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை, அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு வழிகாட்டல்கள் தான் அவசியம். அவ்வாறான சிறந்த சுகாதார வழிகாட்டல்களை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைய, இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் தொற்று அபாயத்தைக் குறைத்து கொள்ள முடியும் என்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் பெற்றுக்கொள்ள முடியும், முகக்கவசங்களை அணிந்துகொள்ளல், சமூக இடைவெளியைப் பேணல், பொது இடங்களில் கூடவேண்டாம், அநாவசியப் பயணங்களைத் தவிர்த்தல் போன்ற வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. இவ்வாறான விடயங்களைக் கடைபிடிப்பதால், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
இவற்றைக் கடைபிடித்தல் என்பது, ஒவ்வொருவரினமும் சுய பொறுப்பாகும். எம்முடைய கவனக்குறைவு காரணமாகத்தான் அதிவேகமாக தொற்றுப் பரவல் ஏற்படுகின்றது. நாம் கவனக்குறைவாக நடந்துகொண்டு, இன்னொருவரைக் குறைகூறுவது தவறாகும்.
இவ்விடயத்தில், அரசாங்கத்தையோ அல்லது எதிர்க் கட்சிகளையோ குறைகூறுவதில் அர்த்தம் இல்லை. இலங்கை மக்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பும் கடமையும், இலங்கைப் பிரஜை என்ற வகையில் நம் ஒவ்வொவருக்கும் உள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இலங்கைக்குப் போதுமானளவு தடுப்பூசிகளைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் கொண்டுவந்துகொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்குத் தேவையான மிக முக்கிய நடவடிக்கை இதுவேயாகும். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கான முழுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இந்தக் காலத்துக்கேற்ப சுய பொறுப்புடன் நடந்துகொண்டால், கொரோனா தொற்றுப் பரவலைத் தடுத்து, பாதுகாப்பாக இருக்க முடியும். மக்கள் சுயக்கட்டுப்பாடு இன்றி செயற்பட்டு நாட்டை முடக்க நேரிட்டால், அதன் மூலம் ஏற்படும் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு , எதிர்காலத்தில் மக்களே முகங்கொடுக்க நேரிடும் என்பதை புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டும். நாட்டை முடக்கினாலும், முடக்காவிட்டாலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பது மக்களின் கடமை என, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் ஊடக இணைப்பாளர்
இரா.சுரேஸ்குமார் 0714551010