Ads Area

அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளின் வருகை கட்டுப்பாட்டுக்குள்.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்து வருகின்றது.

கடந்த காலங்களில் இப்பகுதிகளில் குப்பைகளை உண்ண வரும் யானைகள் அருகிலுள்ள குடியிருப்பு மனைகளை தாக்கியதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இணைந்து குறித்த யானைகளை  கட்டுப்படுத்த துரித  நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை  பிரிவிற்குள் உள்ளடங்குகின்ற அஸ்ரப் நகர் திண்மக்கழிவு கொட்டும் இடத்தில் இரு வேறு நிறுவனங்கள் திண்மக்கழிவுகளை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இதில் ஒரு நிறுவனம் இயற்கைப்பசளை தயாரிப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டுள்ள பாரிய இயந்திரத்தின் மூலம் உரத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மற்றைய தனியார் நிறுவனமொன்று இயற்கை வாயு தயாரிப்பதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏனைய திண்மக்கழிவுகளை கையாளுகின்றன.

இதனடிப்படையில், தற்போது நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, நிந்தவூர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதனால்  அதிலுள்ள இயற்கை திண்மக்கழிவுகள் பெரும்பாலும்  உரம் தயாரிப்பதற்காக உடனடியாகவே அஸ்ரப் நகர் திண்மக்கழிவு கொட்டும் இடத்திலுள்ள  பாரிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.

இதனால் அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உண்ணுவதற்காக தினந்தோறும் 80க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்திருந்த நிலையில், தற்போது 6 முதல் 8 யானைகளே தினமும் வருகை தருவதாக அங்கு பணியாற்றுகின்ற பணியாளர் தெரிவித்தார்.

இது தவிர, அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற யானைகள் இடம்பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தினமும் மேற்குறிய உள்ளூராட்சி மன்ற  பிரதேசங்களிலிருந்து இப்பகுதிக்கு குப்பைகள்  மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்ற நிலையில், மலை போல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகை தந்திருந்தன. 

தற்போது இந்த யானைகளைக் கட்டுப்படுத்த யானை வேலிகள் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மேலும் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல  பொறிமுறைத் திட்டங்கள் பள்ளக்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அம்பாறை பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் அநேகமானவை மேற்குறித்த இடத்திற்கே கொட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe