உலகம் முழுவதும் ஒரு வகையான அரசியல் போராட்டத்தில் முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே மதீனாவை மையமாகக் கொண்டு இஸ்லாமிய கிலாஃபத் உருவானவுடன் உருவான போராட்டம்தான் அது. அரச நிர்வாகம் உம்மத்துகளுக்கு வந்து சேர்ந்த காலத்தில் இருந்தே இந்தப் போராட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உதுமான் ரலி அவர்களை அது கொலை செய்தது. அலி ரலி அவர்களை முன்னிறுத்திப் பிரிந்து சென்றது.
இருந்தாலும் கூட, பல நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் இன்னும் தங்களது நம்பிக்கைகளை இழக்காத சமுதாயமாக அது இருந்து கொண்டிருக்கிறது. மேலைத்தேயங்கள் நாகரீகத்தின் வாசனையைக் கூட நுகராமல் இருந்த காலத்தில் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த சமுதாயம் அது. எதனையும் அறியாமல் இருந்து வந்த மக்களாக இருந்து விஞ்ஞானத்தின் அத்தனை பாதைகளுக்கும் வடிவம் கொடுத்துக் கொண்டிருந்த சமுதாயம் அது. அய்யாமுல் ஜாஹிலிய்யா என்பது அறியாமல் இருந்தோர் என்றுதான் பொருள் கொள்ளப்பட வேண்டுமே தவிர, மூடர்களாக இருந்தோர் என்று பொருள் கொள்ளப்படல் எந்த விதத்திலும் பொருந்தாது. அவர்களுக்கு அறிவைப் புகட்டிய ஒரு மார்க்கத்தைப் போதித்து உலகின் அத்தனை திசைகளுக்கும் அனுப்பியது இஸ்லாம். அவர்கள் போன திசை அத்தனையிலும் வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
அன்றைய காலகட்டத்தில் முதலில் தூதுத்துவத்தின் செய்திகளை எத்திவைக்கும் தூதுவர்களாக அனுப்பப்பட்டவர்கள் ஆத்மீகத் தலைவராகிய ரசூல் ஸல் அவர்களினாலேயேதான் தேர்வு செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் கலீஃபாக்கள் அந்த இடத்துக்கு வருகின்றார்கள். ஒவ்வொரு நாடாக இஸ்லாத்தின் தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டு மார்க்கத்தின் பால் விரைந்து வந்த பொழுது அந்த நாடுகளுக்குரிய ஆளுநர்களை நியமித்ததும் ஆன்மீகத் தலைவர்கள்தான்.
சாம்ராஜ்யம் விரிவடைய விரிவடைய ஆங்காங்கே கிளம்பிய கிளர்ச்சிகளையம் எதிர்ப்புக்களையும் எதிர்கொள்வதற்கான படைகளின் தளபதிகளையும் நியமித்தவர்கள் அதே ஆன்மீகத் தலைவர்கள்தான். தோல்வியையே சந்திக்காத அந்தத் தளபதிகளும் ஆளுநர்களும் நம்பிக்கையின் பிடியில் இருந்த காரணத்தாலும், அவர்களை நியமித்த மார்க்கத்தின் உலமாக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பிடிப்பின் காரணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது.
இன்றைக்கும் இஸ்லாமிய சமூகத்தை நவீன பொருள் முதல்வாத உலகத்துக்குள் இழுத்து வரமுடியவில்லை. கிறிஸ்தவ, யூத, இந்துமத, பௌத்தமத வாதங்களைப் பின்பற்றும் ஏனைய மக்கள் யாவரும் முதலாளித்துவ பொருளாதார நெறிமுறைகளுக்குள் தங்களை மூழ்கடித்து, பொருள் முதல் வாதம் என்கின்ற ஒற்றைச் சொல்நெறியில் கலந்து கரைந்து விட்ட போதினிலும், இன்னும் ஹராம் கலவாத உணவு, வட்டியற்ற வாழ்வு, வரையறைக்குட்பட்ட வியாபாரம், ஆபாசமில்லாத உடையலங்காரம் என்று வாழ்கின்ற ஒற்றைச் சமுதாயமாக முஸ்லீம் சமுதாயம் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் அந்த அறநெறிகளில் இருந்து தவறவில்லை.
ஆகவே தான் மேற்குலகு முஸ்லிம்களை தங்களது பொருளாதாரத்துக்குள் இழுக்கின்றது. அவர்களின் முதலாளித்துவப் பொருளாதாரம் வட்டியையும், பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்பையும் பெண்களின் கவர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது. மேற்குலகின் ஒரே ஆதங்கம் அவர்களால் முஸ்லிம்களை இன்னமும் அவர்கள் நினைத்த இடத்துக்கு இழுத்து வர முடியவில்லையே என்பதுதான். முஸ்லீம் பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைய முன்வருகின்றார்கள் இல்லை. எனவேதான் ஜனநாயம், பெண்கள் உரிமை என்கின்ற பலவிதமான போர்வைகளில் பாரிய அழுத்தம் ஒன்றை உலகம் பிரயோகிக்கின்றது.
அவற்றுக்கெல்லாம் ஒரே பதில் அண்மையில் ஆப்கான் அரசைக் கைப்பற்றிய தலிபான்களிடம் இருந்து வந்திருக்கின்றது. அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள், அதாவது இஸ்லாத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை. அது ஓர் அமீரை, அதாவது தலைவரை அடியொற்றி அமைக்கப்படுவது.
அவர்கள் மேலும் சொல்கின்றார்கள், எங்களுடைய பெண்கள் எங்கள் சகோதரிகள், மனைவிமார்கள், தாய்மார்கள், பிள்ளைகள். அவர்களுக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, அவர்களின் பொறுப்பென்ன? அவர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்பதெல்லாம் எங்கள் பிரச்சினை. அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அவர்கள் மீது சமூகம் சுமத்தியிருக்கின்ற பாரிய சுமைகளுக்கு மேலதிகமாக மேலும் சுமைகளை சுமத்த நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் கல்வி மார்க்க வரையறைக்குள் கொண்டு செல்லப்படும்.
அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.
மார்க்கத்தை அல்லது வேதத்தைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் நான்கு வகையறைக்குள் வகுக்கின்றான்.
முதலாவது வகுப்பினர் ஹளரத்துல் இலாஹியா என்கின்ற தெய்வீக சமூகம். இதில் ரஸூல்மார்கள் நபிமார்கள், இறைநேசர்கள் யாவரும் அடங்குவர். வாழ்வு, தொழில், மூச்சு என்று எல்லாமுமே அல்லாஹ்வின் பராக்கிலேயே இருக்கும். நாம் அல்லாஹ்வுக்காக என்று செலுத்துகின்ற காணிக்கைக்கு உரித்துடையோர் இவர்கள்தான்.
இரண்டாவது வகுப்பினர் கிருபையாளனின் சமூகம் என்றழைக்கப்படுகின்ற ஹளரத்துல் ரஹ்மான் என்று சொல்லப்படுபவர்கள்.
மூன்றாவது சமூகம் ஹளரத்துல் மலிக் எனப்படுகின்ற ஆட்சி, அல்லது இறைமைக்குரிய சமூகம். இதுதான் ஆளுகின்ற சமூகம். இதனைத் தேர்ந்தெடுப்பது தெய்வீக சமூகமாகவே இருக்கும். ஏனென்றால் ஆட்சியும் இறைமையும் அல்லாஹ்வுக்குரியது. அதனை தெய்வீக சமூகம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய ஆட்சிமுறை. அங்கே ஜனநாயகத்துக்கு இடமில்லை. இந்த நிலைமையை நாம் ஈரானில் பார்க்கலாம். ஜனாதிபதியாக யார் போட்டியிட வேண்டும், அப்படிப் போட்டியிட்டு வென்றவரை பதவியேற்க அனுமதிக்க முடியுமா என்பதையெல்லாம் ஆன்மீகத் தலைவர் என்பவர்தான் முடிவெடுப்பார். கிலாஃபத் முழுவதும் அதுவே நடந்தது.
ஆனால் அதற்கான முதிர்ச்சியும். இறைநேசமும் அச்சமும் மார்க்க அறிஞர்களுக்கு இருக்க வேண்டும். அன்றைய காலங்களில் அதற்கென தங்களை அர்ப்பணித்த ஒரு சமுதாயம் இருந்தது. இன்று எல்லோரும் மார்க்கம் பேசலாம் என்கின்ற நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். கிறிஸ்தவ, இந்து, பௌத்த மக்களுக்கு ஏதாவது தங்கள் மதத்தில் ஐயம் இருக்குமானால் அவர்கள் ஒரு மத குருவையே நாடிச் செல்ல வேண்டும். ஆனால் இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் மார்க்கத் தீர்ப்புக்கள் வழங்குகின்ற முல்லாக்களை போகும் வழியெங்கும் காண முடியும். முக நூலில் நிரம்பியே வழிகின்றார்கள்.
இதன் காரணமாகவே நான் உலமாக்களைத் தொடர்ந்து சாடிக் கொண்டிருக்கின்றேன். மார்க்கத்தைத் தெளிவாகக் கற்ற நீங்கள் உங்கள் கடமையில் இருந்து தவறி விட்டீர்கள். நீங்கள் நியமிக்க வேண்டிய அரசியல் வாதிகளுக்குப் பின்னால் நீங்களே தரம் தாழ்ந்து அலைகின்றீர்களே என்கின்ற ஆதங்கம் மனதை வாட்டுகின்றது. ஊருக்கு ராசா யார் என்பதை உலமாக்கள்தான் முடிவெடுக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள்தான் நபிமாரின் வாரிசுகள் எனப்படுவோர். யார் உலமாவாக வரவேண்டும் என்பதும் வரையறுக்கப்பட வேண்டும். வந்தவர் எப்படி இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கேற்றபடி நடந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்துக்காக என்கின்ற நிய்யத்துடன் செயற்பட்டு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு உதவ வேண்டும்.
இல்லையென்றால் இன்று இருப்பது போன்று மாற்று இனத்தவரால் எமது பிரதிநிதிகள் மட்டுமல்ல, எமது தலைவர்களும் தெரிவாகின்ற அவலம் இன்னும் தொடரும். அலிசப்ரி தெரிவாவதற்கு முன்னரே பதியுதீன் மஹ்மூத், எம் எச் முஹம்மது, ஏ சி எஸ் ஹமீத் போன்ற ஏராளமான தலைவர்களை எம்மீது திணித்தார்கள். நாம் எல்லோரையும் வாழ்த்தினோம். வரவேற்றோம். ஆனால் அவர்களின் சாதனைகள் என்ன என்பது எமக்குத் தெரியும்.
ரவுப் ஹக்கீம், ரிஷாட் போன்ற கட்சித் தலைவர்கள் தங்கள் அடிவருடிகளை எமது பிரதிநிதிகளாக எம் தலைமீது திணிக்கின்றார்கள். பணத்தினாலும் பலவிதமான தந்திரங்களாலும் வென்று வருகின்ற அவர்கள் ஈமானும் இல்லாமல், இஸ்லாமும் இல்லாமல் கதிக்கின்ற பக்கத்தில் தங்களை இணைத்து எம்மையும் சேர்த்து விலை கூறி விற்கின்றார்கள். அங்கே பெற்றுக் கொண்டவற்றை மீண்டும் முதலீடு செய்து தங்களை தக்கவைக்கின்றார்கள். இது தொடருமானால் சமூகம் மேலும் மேலும் சிரமத்திலும் சிக்கலிலும் கிடந்து உழல வேண்டியிருக்கும்.
எனவே நாங்கள் இரண்டு இடங்களில் தவறிழைக்கின்றோம். எமக்கு யார் மார்க்க அறிஞராக வரவேண்டும் என்பது ஒன்று. நினைத்தவர்கள் எல்லோருமே மார்க்க அறிஞர்களாகி நிற்கின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் அடங்காத பிள்ளை மதரஸாவில் மாணவன் ஆகிய கதை நாம் அறிவோம்.
எமக்கு யார் அரசியல் தலைவராக வரவேண்டும் என்பது மற்றுமொன்று. தகுதியற்றவர்கள் அரசியல் தலைவர்களாகி நிற்கின்றனர். ஜனநாயகம் காடையர்களையும் கயவர்களையும் எமக்குரிய தலைவர்களாக ஆக்கி விட்டிருக்கின்றது. அந்தத் தேர்வினை முன்னின்று செய்ய வேண்டிய தெய்வீக சமூகம் எம்மைக் கைவிட்டு விட்டது. விளைவு இறைமை அல்லது அரச சமூகம் எனப்படுகின்ற ஹளரதுல் மலிக் எமக்குக் கிடைக்காமலே போய் விட்டது.
நான்காவதாக ஹளரத்துல் குபூபிய்யத் எனப்படுகின்ற போஷகனின் சமூகம். இது ஷரியத்துடன் வேலை செய்கின்ற கூட்டம். அதுவே சாதாரண பொது மகனை உள்ளடக்கியது. அவன் வழிநடாத்தப்பட வேண்டியவன்.
வேதம் எனப்படுவது முதல் இரண்டு சமூகமாகிய தெய்வீக சமூகத்துக்கும் கிருபையாளனின் சமூகத்துக்கும் உரியது. இந்த இரண்டு சமூகமுமே அரச சமூகத்தை தெரிவு செய்ய வேண்டும். நான்காவது சமூகம் இவர்களுக்குரியது. ஆனால் இன்றைய நிலையில் நான்காவது சமூகம் மூன்றாவது சமூகத்தைத் தெரிவு செய்கின்றது. மூன்றாவது சமூகம் முதலிரண்டு சமூகத்தையும் தெரிவு செய்கின்றது. அதுவேதான் ஜனநாயகம்.
அது இஸ்லாத்துக்கு விரோதமானது. இதை விளங்கும் பொழுதுதான் எம் முன்னால் இருக்கின்ற பாரிய சவால் எமக்கு விளங்க வரும்.
அல்குரான் தனது 114வது அத்தியாயமாகிய ‘சூரா அந்நாஸ்’ இல், மனிதர்களின் றப்பைக் கொண்டும், மனிதர்களின் மலிக்கைக் கொண்டும். மனிதர்களின் இலாஹைக் கொண்டும் காவல் தேடுகின்றேன் என்று சொல்வீராக, எனும் வசனங்களில் அந்த சமூக அடுக்கினை அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான்.
எனவே அந்த ரஹ்மானின் சமூகமாகிய தெய்வீக சமூகம் தனது கடமையை உணர்ந்து எந்தவித மனிதர்கள் மீதான அச்ச உணர்வு தவிர்த்து, அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி, எமது மலிக்கின் சமூகமாகிய அரச சமூகத்தைத் தேர்வு செய்ய உதவ வேண்டும்.