நவாஸ் ஸாஜித் -
அக்கரைப்பற்று ஜனாசா நலன்புரி அமைப்பு; அது சார்ந்த உறுப்பினர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அப்துல் கபூர் அஸ்மியினால் அண்மையில் சபை அமர்வில் ஆற்றப்பட்ட சரச்சைக்குரிய உரையின் உண்மைத்தன்மையை அறிய ஞாயிற்றுக்கிழமை (05-09-2021) மாலை ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலில் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர், ஜம்இயத்துல் உலமா இணைச்செயலாளர், ஜனாசா பணி செய்யும் கண்ணியத்திற்குரிய உலமாக்கள், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அப்துல் கபூர் அஸ்மி, மற்றும் அக்கரைப்பற்று ஜனாஸா நலன்புரி சங்க தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளரும் கலந்து கொண்டனர்.
இரு தரப்பு விடயங்களும், நியாயங்களும் விரிவாக கலந்தாராயப்பட்டன. அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அப்துல் கபூர் அஸ்மி “ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உலமாக்களை சாடவில்லை என்றும் அவ்வாறு அது எவராவது மனதை புண்படுத்தியிருந்தால் அல்லாஹ்விற்காக மன்னிக்கும்படியும்” பணிவுடன் வேண்டிக்கொண்டார்”. கண்ணியமிக்க உலமாக்களும் தங்களுக்கு ஏற்பட்ட மனக்கவலைகளை மறந்து உறுப்பினரின் உரையின் சூழ்நிலைகளைப் புரிந்து அதை ஏற்றுக் கொண்டார்கள். சுமூகமாக முன்மாதிரியாக கருத்து முறண்பாடுகள் களையப்பட்டன.
இறுதியாக இந்நிகழ்வு சம்பந்தமாக முகப்புத்தக பதிவொன்றை இடும்படி என்னிடம் வேண்டிக்கொண்டார்கள்.
ஆகவே ஊர் மக்களாகிய நாம் இத்துடன் இது சம்பந்தமான பதிவுகளை பகிர்வதை முற்றாக தவிர்த்து , முன்பு இட்ட பதிவுகளையும் நீக்கி எமது ஊரினதும், உலமாக்களினதும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர்களினதும் கொளரவத்தை பாதுகாக்குமாறு வினயமாக வேண்டிக் கொள்கின்றோம் என அக்கரைப்பற்று ஜனாஸா நலன்புரி அமைப்பு சார்பில் பொறியியலாளர் முஹம்மட் ஷரீப் முர்ஷித் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.