Ads Area

கரங்கா வட்டை விவகாரம் : முஸ்லிம் எம்.பிக்களின் தலையீட்டினால் தீர்வை நோக்கி நகர்கிறது !

 நூருல் ஹுதா உமர்

மிக நீண்டகாலமாக அம்பாறை- சம்மாந்துறை கரங்கா வட்டை காணியில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் இம்முறை விவசாயம் செய்ய முடியாதவாறு சில குழுவினர் இடைஞ்சல் செய்து வருவதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கவனத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தததை அடுத்து கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர், பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இது விடயமாக சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி எடுத்துரைத்து தெளிவுபடுத்தி விவசாயிகளுக்கு எதிராக குழப்பம் விளைவிக்க வந்த குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சுமூகமான நிலையை உருவாக்கி தருமாறு வேண்டியிருந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் சில நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரை கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றுமுன்தினம் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவை சந்தித்து விவசாயிகளின் ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரம் இருக்கத்தக்கதாக விவசாயம் செய்ய முடியாதவாறு சில குழுவினர் தடுத்துவருவதனால் அந்த குழுவினருக்கு எதிராக பொலிஸாரை கொண்டு நடவடிக்கை எடுப்பதுடன் எவ்வித அச்சுறுத்தல்களுமில்லாது விவசாயம் செய்யும் சூழலை உருவாக்கி, பாதுகாப்பு வழங்குமாறு அமைச்சரை வலியுறுத்தினர்.

விடயங்களை கேட்டறிந்த மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விடயம் தொடர்பில் பணிப்புரை விடுத்தார். மேலும் இது தொடர்பில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை நாளை சந்தித்து விடயத்தை துரிதப்படுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe