Ads Area

போதைப்பொருள் பாவிக்க வேண்டாம்; கெட்ட நண்பர்களுடன் சேர வேண்டாம் என்று புத்திமதி சொன்ன போதே, எனது மகன், எனது கண்ணைத் தோண்டிவிட்டான்” - வாழைச்சேனை - தியாவட்டவான் அசனாரின் சோகக்கதை!

 (எச்.எம்.எம்.பர்ஸான்)

யாருக்கு வேண்டுமானாலும் புத்திமதி கூறலாமென நினைத்து விடக்கூடாது. ஆனால், பெற்றப் பிள்ளைகளுக்கு புத்திமதி கூறியே ஆகவேண்டும். அப்போதுதான் கட்டுக்கோப்புடன் வளர்க்கமுடியும். அதேபோல, பிள்ளைகள் சேரும் நண்பர்கள் தொடர்பிலும் அவதானமாகவே இருக்கவேண்டும்.

இல்லையேல் சிலர், தானும் கெட்டு தனது குடும்பத்துக்கும் இழுக்கை ஏற்படுத்திவிடுவர். இங்கு நடந்ததோ வேறுகதை, அதாவது, தனது மகனுக்கு புத்திமதி கூறிய தந்தையின் கண்ணொன்றை, கைவிரல்களால் தோண் யெடுத்துவிட்டார் அவரது மகன்.

அவ்வாறு கண்ணொன்றை இழந்து இன்னும் படுகையில் கிடக்கும் தந்தை, எம்மிடம் பேசினார்.

“போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான எனது மகனை திருத்துவதற்கு, நான் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன். போதைப்பொருள் பாவிக்க வேண்டாம்; கெட்ட நண்பர்களுடன் சேர வேண்டாம் என்று புத்திமதி சொன்ன போதே, எனது மகன், எனது கண்ணைத் தோண்டிவிட்டான்” என 67 வயதுடைய தந்தையொருவர் தனது மன வேதனையை தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில், சனிக்கிழமை (18), தனது தந்தையை கொடூரமான முறையில் தாக்கிய அவரது மகன், அவரது கண்ணை தனது விரல்களால் தோண்டி எடுத்த கோரச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மகனின் தாக்குதலுக்கு இலக்கான அந்நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தற்போது வரை அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடூரமான தாக்குதலுக்குள்ளான சத்கத்துல்லாஹ் அசனார் கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது மகனுக்கு தற்போது 19 வயது. அவன் 2017ஆம் ஆண்டில் இருந்தே போதைக்கு அடிமையாகி விட்டான். நான் அவனை திருத்துவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை செய்துள்ளேன். நான் பள்ளிவாசல் ஒன்றில்தான் கடமை புரிந்து வந்தேன். எனது மகன் போதைப்பொருள் பாவனையாளர் என்ற காரணத்தால் நான் கடமையில் இருந்து விலகினேன்.

எல்லோரும் வந்து சொல்லுவார்கள், உங்க மகன் போதைப்பொருள் பாவிக்கிறார் என்று. அதைக் கேட்கும்போது எனக்கு கவலைகள் வரும்; எனக்கும் வெட்கம், மானம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு தொடர்ந்தும் பள்ளிவாசலில் கடமை செய்ய முடியாமல் போனது.

எனது மகனைத் திருத்தி எடுக்க, நான் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐந்து தடவைகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில்

முறைப்பாடு செய்துள்ளேன். அது பலனளிக்கவில்லை. எனது மகனை விட்டுவிடுங்கள் என்று அவனது நண்பர்களிடமும் நான் அடிக்கடி சொல்லி வருவதுண்டு; திருந்தியதும் இல்லை. எனது மகனை விட்டு அவர்கள் விலகியதுமில்லை.

சம்பவம் நடந்த அன்றைய தினம், எனது மகன், என்னிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டான்; நான் கொடுக்கவில்லை. பணம் தராவிட்டால் கொலை செய்வேன் என்று சொல்லிக் கொண்டே என்னைத் தாக்கினான். எனது தலையில் கல்லால் கடுமையாக தாக்கினான். பின்னர் எனது கழுத்தை நெரித்து, என்னைக் கொலை செய்ய அவன் முயற்சி செய்தான்; நான் அவனிடம் போராடித்தான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். ஆனால், எனது மகன், எனது கண்ணை தோண்டி எடுத்துவிட்டான். இப்போது எனது இடது கண் முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டது. வலது கண்ணும் 80 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாக வைத்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், நான் கவலைப்படவில்லை; தைரியமாக இருக்கிறேன். எனது மகனை நான் ஜெயிலுக்கு அனுப்பவில்லை. அவர் செய்த வேலையால்தான் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.

எனக்கு நடந்த இந்தச் சம்பவம் போல, இனி யாருக்கும் நடக்கக் கூடாது. பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகள் விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்போது போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் அதற்கெதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்” என அழைத்தார். 

கல்குடா நேசன்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe