மு.கா தலைவர் ஹக்கீம் தமிழ் பிரதிநிதிகளையும், ஞானசாரவையும் கண்டித்து நடவடிக்கை எடுப்போரை கடிந்து கொள்வது ஏன்?
சர்வதேச அளவில் இலங்கை முஸ்லிங்களின் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இலங்கை முஸ்லிங்களின் தலைவராக செயற்பாடாமல் தான்தோன்றித்தனமாக செயற்படுவது இந்த காலகட்டத்தில் பொருத்தமற்றதாக உள்ளது என சமூக செயற்பாட்டாளர் எச்.எம்.எம். அன்வர் சாடியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம் சமூகத்தை நோக்கி கடுமையான வார்த்தைகளை வீசியது மட்டுமின்றி வணக்கத்துரிய நாயகன் அல்லாஹ்வை மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரவை கண்டித்து ஒரு வசனம் கூட பேச வாய்திறக்காமல் இருந்த நீங்கள் கண்டியிலுள்ள சிங்கள மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மௌனமாக இருந்தது மட்டுமின்றி அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த கிழக்கு மு.கா எம்பிக்களை நோக்கி மறைமுகமான யுத்தத்தை செய்து கொண்டிருப்பது எவ்வையில் நியாயம்? சிங்கள மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக ஞானசாரவை கண்டித்து நடவடிக்கை எடுப்போரை கடிந்து கொள்வது ஏன்?
வாழைச்சேனை, தோப்பூர், கல்முனை போன்ற பிரதேசங்களில் உங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் செய்யும் அநியாயமான வேலைகளுக்கு எதிராக கொஞ்சமும் வாய்திறக்காமல் மௌனம் காத்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக மறைமுகமாக செயற்படும் நீங்கள் மறுமையை பற்றி சிந்திக்க மறந்தது ஏன்? வடக்குகிழக்கை இணைக்க கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவை பலமாக கொண்டுள்ள நீங்கள் வடகிழக்கை இணைப்பதனால் கிழக்கு முஸ்லிங்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வெளிப்படையாக பேச தயங்குவது ஏன்?
முஸ்லிங்கள் செறிந்து வாழும் மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் உள்ளுராட்சி சபையை கைப்பற்ற சகல வழிகளிலும் வாய்ப்பிருந்தும் தமிழ் தேசிய கூட்டைப்புடன் கொண்ட காதலால் அதனை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க தயாரான உங்கள் எண்ணத்தில் சமூக பற்றுமில்லை கட்சி பற்றுமில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
உங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அந்தஸ்தை வழங்கி அழகுபார்த்த கிழக்கு மக்களை நோக்கி கடுமையான வசனங்களை கொண்டு எழுதி மனதை நோகடித்தது மாத்திரமின்றி கட்சியின் கிழக்கு போராளிகளை இழிசொல்லை பயன்படுத்தி மானவங்கப்படுத்திய உங்களின் சகோதரருக்கு எதிராக உங்களால் வாய்திறக்க முடியாமல் போனதன் மர்மம் என்ன? கட்சியின் கிழக்கு போராளிகளிடம் வருத்தம் தெரிவிக்க கூட இதுவரை நீங்கள் முன்வராமை ஏன்?
இந்த காலகட்டத்தில் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள முஸ்லிம் முரண்பாட்டை உருவாக்கி அவர்களின் எண்ணத்தில் உள்ள வடகிழக்கு இணைப்பு, வாழைச்சேனை, தோப்பூர், கல்முனை போன்ற பிரதேசங்களில் உள்ள அவர்களின் நீண்டநாள் ஆசைகள் உட்பட முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆபத்து வரக்கூடிய சலுகைகளை பெற முயற்சிகளை செய்கின்றனர். இதனை பகிரங்கமாகவே வியாழேந்திரன், ஸ்ரீநேசன், கலையரசன் போன்ற தமிழ் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டு அறிவித்துள்ளார்கள். அவர்களின் இராஜதந்திர நகர்வை நன்றாக அறிந்த நீங்கள் தமிழ் தலைமைகளையும், இன்னும் சிலரையும் திருப்திப்படுத்த முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்களை மறந்து அறிக்கைகளை விடுவதை மறந்து ரணில் விக்ரமசிங்க Mr.Fail ஆனது போன்று நீங்களும் Mr.Fail ஆகியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.