Ads Area

முஸ்லிங்கள் மீதான தமிழ் தலைமைகளின் பாசம் வடகிழக்கை இணைக்க போடும் வேசமே.

 மாளிகைக்காடு நிருபர்

தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும்  அவர்கள்  இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தமிழ் தலைமைகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிங்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேறானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இன்று காலை அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு சமீபத்தைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், பெரும்பான்மை சிங்கள மக்களால், சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை தமிழ் தலைமைகளினால் மறுக்க முடியுமா? இனியும் முஸ்லிங்களினால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது. நம்பி இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க முஸ்லிங்கள் முட்டாள்களில்லை.

இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இன்றுள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் இறந்து போகாமல் உயிருடன்தான் இருந்தனர், அவர்களில் ஒருவர் கூட இது தவறு முஸ்லிம்களும் எமது சகோதரர்கள் தான் என கூற நாவு துடிக்காமல் போனதன் மூலம் தமிழ் தலைமைகளின் வரண்டுபோன இதயத்தைக் காட்டுகிறது.  அதனைவிடவும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள், இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும், கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? என்பதை வரலாற்றை மீட்டிப்பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அன்றைய நாட்களில் முஸ்லிங்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் மறுநாள் புலிகள் ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது தமிழ் நண்பர்கள்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. முஸ்லிம் மக்கள் பட்ட துயரை கண்டும் காணாதது போல் கண்பொத்தி வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் மக்களை இறைவன் தண்டிக்காமல் இல்லை. எங்கள் பகுதிகளில் மிருகங்களைக்கூட கம்புகளை நாட்டி இரண்டு வரியில் கம்பி இட்டு அடைத்து வைப்பர், ஆனால் வடக்கு தமிழ் மக்களை மெனிக் பாமில் 9 பட்டுக் கம்பியால் சுத்தப்பட்ட கூண்டுக்குள் மிருகங்களை விடவும் மோசமாக அடைத்து வைத்திருன்தனர், இதனை நான் சுட்டிக் காட்டுவது அம்மகளை நோவினை செய்வதற்காக அல்ல கண்முன்னே அநீதி நடந்தும் கண்கெட்டவர்கள்போல் இருந்தமையின் விளைவுகளால் ஏற்பட்ட வரலாற்றை புதிதாக வேடமிடுபவர்களுக்கு நினைவுபடுத்தவே விரும்புகிறேன். .

தமிழ் தலைமைகள் வரலாறுகளை திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்களின் முன்னாள் நிறைய துரோக சம்பவங்கள் உள்ளதை அறிந்துகொள்வார்கள்.  பள்ளிவாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல் காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மூச்சு விடாமல் எங்களால் வரலாற்றில் நடந்த கோர சம்பவங்களையும் கூற முடியும். அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் தலைமைகளை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். அவர்கள் மின்னுவது போன்று  தங்கமல்ல. ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர், அதனால் தான் விருப்பத்துக்கு மாற்றமாக இணைக்கப்பட்ட வடகிழக்கை சட்டரீதியாக பிரித்தனர்.  வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது என்பது தமிழ் தலைமைகளின் கனவாக இருந்துவிட்டுப்போகட்டும். மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த வடக்கு கிழக்கு முஸ்லிங்கள் தயாராக இல்லை என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe