சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி, குழந்தை திருமணத்தால் உலகளவில் ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும், தெற்காசியாவில் ஒரு நாளைக்கு 6 பெண் குழந்தைகள் வீதமும் உயிரிழக்கின்றனர்.
இதுதொடர்பாக சேவ் தி சில்ரன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தெற்காசியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை திருமணம் தொடர்பாக 2,000 உயிரிழப்புகளும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 உயிரிழப்புகளும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 560 உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
உலகளவில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குழந்தைத் திருமண விகிதம் அதிகமாக உள்ளது. உலகளவில் குழந்தைத் திருமணம் தொடர்பான உயிரிழப்புகளில் கிட்டதட்ட பாதி (9,600) அதாவது ஒரு நாளைக்கு 26 உயிரிழப்புகள் இங்கு பதிவாகின்றன.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவத்தால் மட்டும் ஆண்டுக்கு 22,000க்கும் அதிகமான பெண்குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் உலகளவில் கிட்டத்தட்ட 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டாலும், குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணமான கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு முன்பே இந்த முன்னேற்றம் தடைப்பட்டுவிட்டது.
நீண்டகால ஊரடங்கு காரணமாக, பல குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுவதால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறை அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் இதனால், 10 மில்லியன் சிறுமிகள் 2030க்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அதிகமான பெண்கள் இறக்கும் அபாயமும் உள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இதுதொடர்பாக சேவ் தி சில்ட்ரன் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் கூறும்போது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் மிக மோசமான, கொடிய வடிவங்களில் ஒன்று குழந்தை திருமணம். ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கானவர்கள் பெரும்பாலும் வயதான ஆண்களுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், குழந்தைகளாக அவர்களின் கற்றல் வாய்ப்பை இழக்கின்றனர்.
இந்த உயிரிழப்பு பட்டியலில், டீனேஜ் பெண்களின் பிரசவமே முதலிடத்தில் உள்ளது, ஏனென்றால் அவர்களின் இளம் உடல்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இல்லை. குழந்தைகளைப் பெற்ற குழந்தைகளின் உடல்நல அபாயங்களை புறக்கணிக்க முடியாது.
இதனால், அரசு சிறுமிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது பிரசவம் தொடர்பான இறப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்களுக்கும் தங்களைப் பாதிக்கும் முடிவுகள் பற்றிய கருத்து இருந்தால் மட்டுமே இது நடக்கும், என்று ஆஷிங் கூறியுள்ளார்.