Ads Area

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் தொழில் வல்லுநர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ள சவுதி அரசு.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் சிறப்புத் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களுக்கு குடியுரிமை வழங்க சவுதி அரேபியா அரசு கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. சவூதி அரேபியாவின் ‘விஷன் 2030’ க்கு ஏற்ப உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுக்கு கவர்ச்சிகரமான உயர்மட்ட வணிக சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசின் அறிவிப்பின்படி சட்டம், மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் சில உயர்-திறன் வாய்ந்த நிபுணர்கள் சவுதி குடியுரிமையைப் பெற இந்த ஆணை அனுமதிக்கிறது. மேலும் தடயவியல் மற்றும் மருத்துவ அறிவியல், விவசாயம், அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் செயற்கை நுண்ணறிவு, கலை, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிபுணர்களையும் குடியுரிமை பெற தகுதி வாய்ந்தவர்களாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில், சவூதி அரசு நிர்ணயிக்கும் தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் புகழ்பெற்ற அறிவியல், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கலாச்சார நிபுணர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக சவூதி அரசு அறிவித்திருந்தது. மேலும் இது தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சவூதியில் தங்களின் செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை குறித்து சவூதி ப்ராஜக்ட் எனும் அரசாங்க தளம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “அரபு உலகம் பெருமிதம் கொள்ளும் ஒரு மாறுபட்ட மையமாக சவூதி அரேபியா மாறுவதற்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரசாங்கத்தின் இந்த புதிய உத்தரவு குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் உலகளாவிய தொழில் வல்லுநர்கள் மட்டுமல்லாது, நாட்டில் பணிபுரியும் சிறப்புமிக்க சில வெளிநாட்டினர் மற்றும் பழங்குடியினரையும் உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை வழங்குவதற்கான அரசின் இந்த நடவடிக்கை, இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையில் நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தல், வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தத் திட்டங்களுடன் தொடர்புடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - Khaleej Tamil (www.khaleejtamil.com) 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe