கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை நியாயமான முறையில் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆசிரியர்களை சமப்படுத்தல், பதிலீட்டு ஆசிரியர்களை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் கடந்த 3 ஆம் திகதியிடப்பட்டு தங்களது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் கிண்ணியா வலயத்திலிருந்து 51 ஆசிரியர்கள் வெளி வலயங்களுக்கு இடமாற்றப்படும் அதே வேளை 2 ஆசிரியர்கள் மட்டுமே அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலின்படி ஒரு பாடசாலையில் உயர்தர வகுப்புக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றப்படும் அதேவேளை அப்பாடசாலைக்கு பதிலாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அப் பாடசாலையில் உயர்தர வகுப்புக்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல பல பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இடமாற்றப்படுகின்ற அதேவேளை பதிலாசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. இதனால் அப்பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாது வெளி மாகாணங்களிலும், வெளி வலயங்களிலும் நீண்ட காலம் பணியாற்றி சமீப காலங்களில் கிண்ணியா வலயத்திற்கு இடமாற்றம் பெற்றவர்களும் இந்த இடமாற்றப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது இந்த ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகவே இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் எந்த கல்வி வலயத்திலாவது குறித்த பாடங்களுக்கு மேலதிக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை தேவையான வலயங்களுக்கு வழங்குவதற்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கும் போது அதில் நான் தலையீடு செய்யப் போவதில்லை. தங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.
தங்களால் வெளியிடப்பட்டுள்ள இந்த இடமாற்றப்பட்டியல் வலயக்கல்வி அலுவலகத்தின் துணையின்றி மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டதாகவே நான் உணர்கிறேன். ஏனெனில் வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து ஆசிரியர் பட்டியல் பெறப்பட்டிருந்தால் மேலதிக ஆசிரியர்கள் இருந்தால் மேலதிக ஆசிரியர்களின் விபரங்களை அவர்கள் வழங்கியிருப்பார்கள்.
ஆனால் மேலதிக ஆசிரியர்கள் இல்லாத பல பாடசாலைகளில் அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
கிண்ணியா கல்வி வலயம் தேசிய மட்டத்திலும், மாகாணத்திலும் தொடர்ந்து பின்தங்கிய வலயமாக இருந்து வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்நிலையில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் இந்த செயற்பாடு இந்த வலயத்தை தொடர்ந்தும் பின்னிலையில் இருக்க துணை புரியும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
எனவே, தயவு செய்து தங்களால் வெளியிடப்பட்ட இப்பட்டியலை தாங்கள் நேரடியாக மீளாய்வு செய்து நியாயமான முறையில் இடமாற்றங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.