தொழில்துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் ஐக்கிய அரபு அமீரகம் தற்பொழுது தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக வாரத்தில் கூடுதல் விடுமுறை காலத்தை அறிவித்துள்ளது.
அமீரக அரசானது செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மதியம், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டரை நாட்கள் ஊழியர்களுக்கு வாரந்தோறும் அளிக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வார விடுமுறை மூலம் அமீரகத்தில் வேலை நாட்கள் நான்கரை நாளாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து மத்திய அரசு துறைகளும் ஜனவரி 1, 2022 முதல் இந்த புதிய வார விடுமுறை நாட்களுக்கு மாறும். இந்த நடவடிக்கையின் மூலம், உலகளவில் வாரத்தின் ஐந்து நாள் வேலை நாட்களை விட குறைவான தேசிய வேலை நாட்களை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மற்றும் ஒரு நாளைக்கு 8.5 வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ஊழியர்கள் 4.5 மணி நேரம் வேலை செய்வார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகளில், ஊழியர்கள் நெகிழ்வான வேலை அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த நீண்ட வார இறுதி விடுமுறையானது உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும், வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும் தனியார் துறை பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. விரைவில் அது குறித்த விளக்கங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி - https://www.khaleejtamil.com/