Ads Area

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை : காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்.


பாகிஸ்தானில் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராகக் கடமையாற்றிய இலங்கையரான பிரியந்த குமார அடிப்படைவாதக் குழுவொன்றினால் சியால்கோட்டில் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் அடித்துக் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீயிட்டு எரிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

சர்வதேச ரீதியில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள, அநீதியான முறையில் அப்பாவியொருவர் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் மனிதாபிமானத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பாகும். 

அப்பாவிகளையும், நிராயுதபாணிகளையும் கொல்லக்கூடாது எனப்போதிக்கும் இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான மிலேச்சத்தனமான படுகொலையினை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

இப்படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானின் சட்டங்களின் பிரகாரம் தகுதி, தராதரம் பாராது உச்சளவில் தண்டிக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்ப உறவுகளுக்கு காத்தான்குடி மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இலங்கையில் மத நல்லிணக்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கரிசனை கொண்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அச்செயற்பாடுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இவ்வாறான சூழ்நிலையில் அனைவரும் பொறுமைகாப்பதோடு அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும்.  

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டினை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். 

எதிர்காலத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்குரிய கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு வழிமுறைகளும் உடனடியாக வகுக்கப்பட்டு அமுல்படுததப்பட வேண்டுமெனவும் வேண்டுகொள் விடுக்கின்றோம்.

நன்றி : எம்.எஸ்.எம்.நூர்தீன்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe