Ads Area

13 வயது மகள் பாலியல் துஸ்பிரயோகம் : தப்பிச்செல்ல முயன்ற 36 வயதுடைய தந்தை காத்தான்குடி பொலிஸாரால் கைது.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பிச்செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனைப்பகுதியில் திங்கட்கிழமை (6) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது, சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பிச்செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரைக்கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன், இவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe