Ads Area

மயிலத்தமடுவில் 16 சக்திவாய்ந்த எறிகணைக்குண்டுகள் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்திலிருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக்குண்டுகள் 16 நேற்று 2021.12.12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:15 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக காகித ஆலை விசேட அதிரடிப்படையுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் கைவிடப்பட்டுள்ள குண்டுகள் பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைக்கும் தகவலுக்கமைய மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டு வருவதுடன், இவ்வாறு  குண்டுகளை மீட்டு செயலிழக்கச் செய்வதனூடாக சிவிலியன்கள் உயிர்கள் பாதுக்காக்கப்படுவதுடன், உயிரை துச்சமென மதித்து இப்பணியில் ஈடுபட்டு வரும் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியினரின் சேவை பாராட்டுக்குரியதுமாகும். 

அத்தோடு, இவ்வாறான அனாமோதய குண்டுகள், ஆயுதங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் இது தொடர்பான தகவல்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்குவதனூடாக மூதூரில் இடம்பெற்ற 15 வயதுடையவரின் மரணம் போன்று இடம்பெறாமல் தடுக்க வாய்ப்பாக அமையும். 

அத்துடன், இவ்வாறான அனாமோதய குண்டுகள், வெடிக்கும் பொருட்களை பொதுமக்கள் கையாள்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும். 

அண்மையில் வடக்கில் இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட அனாமோதய பொருளை தனது வீட்டுக்கு கொண்டு வந்து, அதனை வெட்டிப் பார்க்க முற்பட்ட போது வெடித்ததனால் உடல் சிதறி பரிதாபமாக குடும்பஸ்தர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆகவே, இவ்வாறான குண்டுகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், அது பற்றிய தகவல்களை அருகிலுள்ள பாதுகாப்புத்தரப்பினருக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe