பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முதலமைச்சு, சுதேச மருத்துவ திணைக்களம், மாகாண சட்டப்பிரிவு, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்களம், மாகாண சுற்றுலா சபை, வெளிநாட்டு கென்சிலர் பிராந்திய அலுவலகம் போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு கிழக்கு மாகாண சபை வளாகத்தில் இன்று (03) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஏ.ஜெலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஏ.ஜெலீல் அவர்களினால் தேசியக்கொடியும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களினால் மாகாணக் கொடியும் ஏற்றப்பட்டு தேசியக் கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும், ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்னிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும், நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதீக வள அபிவிருத்தியின் ஊடாக மக்கள் மைய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வளம்பெற்ற மனித வளங்களை வழி நடாத்தும் தூய அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளரான மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும், குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை வினைத்திறனுடன், பயனுறுதி வாய்ந்ததாக, உறுதியான எண்ணத்துடனும், உச்ச அளவு அர்ப்பணிப்புடன் நேர்மையாக, மக்களுக்குச் சார்பாக நிறைவேற்றுவதாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், முதலமைச்சின் உதவிச் செயலாளர் ஜீ.தேவநேசன், முதலமைச்சின் பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.