டுபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இருந்து, இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத் நோக்கி, ‘எமிரேட்ஸ் இகே – 524’ ரக பயணியர் விமானம் கடந்த 9ஆம் திகதி இரவு புறப்படத் தயாரானது. அதே நேரத்தில் டுபாய்-பெங்களூரு இடையிலான ‘எமிரேட்ஸ் இகே – 568’ ரக விமானமும் புறப்பட தயாரானது.
இந்த இரண்டு விமானங்களும் 5 நிமிட இடைவெளியில் புறப்படுவது வழக்கம்.துபாய் – ஹைதராபாத் விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் அதிவேகமாக வந்த போது, எதிரில் துபாய் – பெங்களூரு விமானம் புறப்பட தயாராகி வந்து கொண்டிருந்தது. உடனடியாக சுதாரித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் டுபாய் – ஐதராபாத் விமானத்தின் புறப்பாடை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி மற்றொரு விமானத்துக்கு வழிவிட்டது. அந்த ஓடுதளத்தில் இருந்து டுபாய் – பெங்களூரு விமானம் புறப்பட்டுச் சென்றது. கடைசி நேர எச்சரிக்கையால் மிகப் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐதராபாத் புறப்பட இருந்த விமானம் அனுமதி கிடைக்கும் முன்னரே புறப்பட தயாரானது குழப்பத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.