Ads Area

ஹிஜாப்பை அகற்றினால்தான் அனுமதிப்போம்.. கல்லூரியில் 3 வாரமாக தடுக்கப்படும் முஸ்லிம் மாணவிகள்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 வாரமாக அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

கர்நாடகாவில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்து மாணவர்கள், மாணவியர் எதிர்க்க தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மங்களூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர்.

இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அரசு பியு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஹிஜாப், காவி துண்டு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய உடை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனால் அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் கடந்த 3 வாரமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மூன்று வாரமாக 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிஜாப்பை அகற்றினால்தான் இவர்களை அனுமதிப்போம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மாணவிகள் அளித்த பேட்டியில், நாங்கள் எங்கள் உரிமைகளைதான் கடைபிடிக்கிறோம். எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் கல்லூரிக்குள் வந்தும் எங்களுக்கு ஆப்சென்ட் போடுகிறார்கள். அதோடு நாங்கள் வேண்டுமென்றே லீவ் போட்டதாக லெட்டரில் பொய்யாக எழுதி கொடுக்க சொல்கிறார்கள். எழுதி கொடுக்க முடியாது என்றால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்றும் மிரட்டுகிறார்கள் என்று மாணவியர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த கல்லூரியின் முதல்வர் ருத்ரா கவுடா தரப்பு அளித்த பேட்டியில், அந்த மாணவிகள் சிஎப்ஐ என்று இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள்தான் வேண்டும் என்றே பிரச்சனை செய்கிறார்கள். இங்கே ஏற்கனவே 150 சிறுபான்மையினர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி புகார் கொடுக்கவில்லை. இவர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள். கல்லூரி விதியை அவர்கள் மதிக்க வேண்டும். இதுதான் கல்லூரி உடை ரூல்ஸ்.

இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் வரும் நாட்களில் கல்லூரிக்குள் தொழுகை நடத்தவும் அனுமதி கேட்பார்கள். அவர்களின் சிஎப்ஐ அமைப்பு சர்ச்சைக்குரியது என்று கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமியர்களின் சிஎப்ஐ மற்றும் பிஎப்ஐ அமைப்பு அளித்த பதிலில், இது உடை சுதந்திரம். இந்து பெண்கள் பொட்டு வைத்து வருகிறார்கள்.

கிறிஸ்துவ பெண்கள் ஜீசஸ் மாலை அணிந்து வருகிறார்கள். சிலர் பூணூல் அணிந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது இஸ்லாமிய பெண்கள் அவர்களின் உடைகளை அணிவதில் என்ன தவறு இருக்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மத உரிமை இது. இதை ஒரு கல்லூரி இயக்குனர் பிடுங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு உள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe