பொத்துவில் கிரான்கோவை பகுதியில் வன இலாகாவினால் செய்கை பண்ணவிடாமல் தடுத்து வைத்துள்ள 502 ஏக்கர்கள் காணிகளின் விவசாயிகளுடனான சந்திப்பு பொத்துவில் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் M. ஆதம் லெப்பை மௌலவியின் தலைமையில் பொத்துவில் கலாசார மண்டபத்தில் நேற்று (27.02.2022) இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் MH அப்துல் றஹீம், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ஆதம் சலீம், கிரான்கோவை விவசாய அமைப்பின் செயலாளர் M. சலாம் ஆசிரியர் மற்றும் M பஸீர் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான அவகாசத்தை பெற்றுத் தருவதற்காக காத்திரமாகக் களமாடும், பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் பொத்துவில் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் M. ஆதம் லெப்பை மௌலவி அவர்கள் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஆதம் சலீம் அவர்கள், காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பது அரசியல்வாதிகளுடைய கடமை. அதன் அடிப்படையில் இம்மண்ணில் ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முன்பிருந்து நான் இந்த விவசாயிகளுடன் தீர்வினைப் பெற முயற்சி செய்திருக்கின்றேன். இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைப்பெற களமாடுவது பாராட்டத்தக்கது. அதற்கான பூரண ஒத்துழைப்பை பாராளுமன்ற உறுப்பினருக்கு நாம் வழங்குவதனூடாக நமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எமது ஊரில் மிக நீண்டகாலமாகக் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். எவ்விதமான விமர்சனங்கள் வந்தாலும், தனது இலக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே என்ற தூய நோக்கோடு களமாடும் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களை நான் மெச்சுகிறேன் என பொத்துவில் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் MH அப்துல் றஹீம் அவர்கள் தெரிவித்தார்.
இந்தக் காணிகள் தொடர்பான பிரச்சினையின் மூலம் மற்றும் அதன் தெளிவுகளை விபரமாக அறிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள ஏதுவான வழிகளில் அணுகி எனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது, தெரிவித்தார்.
இதன்போது, கலந்து கொண்டிருந்த கிரான்கோவை பகுதியிலுள்ள காணிகளின் விவசாயிகள், தமது காணிகள் தொடர்பான மேலதிக விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களிடம் ஒப்படைத்தனர்.