தகவல் - சம்மாந்துறை அன்சார்.
பஹ்ரைனில் இறால் பிடிப்பதற்கும், வர்த்தகம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ஆண்டுதோறும் விதிக்கப்பட்ட ஆறு மாத கட்டாயத் தடை தற்போது நடைமுறைக்கு வந்து அது எதிர்வரும் ஜூலை 31 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் இறால் தொழிலின் வளர்ச்சிக்கும், மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கும் வகையில் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளில் மீன் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான வளைகுடா முடிவுகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட இக்கால கட்டத்தில் இறால்களைப் பிடிப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் படகுகளில் வலைகள், கருவிகள், இயந்திரங்கள் மூலமாக அல்லது எந்த வகையிலும் இறால்களைப் பிடிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தடையுத்தரவு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தில் சந்தைகள் மற்றும் பொது இடங்களில் புதிய, குளிரூட்டப்பட்ட, உறைந்த மற்றும் பதப்படுத்தப்படாத இறால்களை சந்தைப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதற்காக காட்சிப்படுத்துதல் அனைத்தும் தடையாகும் என பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.