தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத் வீடு ஒன்றில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தமைக்காக குவைத் நாட்டுப் பெண் ஒருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொடூரமான கொலை குவைத்துக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாகவும், இது பிலிப்பைன்ஸிலிருந்து குவைத்துக்கு வீட்டு வேலைகளுக்கு பணிப் பெண்களை அனுப்பாமலிருப்பதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணை அடித்து சித்திரவதை செய்ததற்காக அவரது கணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தனது கணவருக்கும் பிலிப்பைன்ஸ் பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், தனது கணவரை தன்னிடமிருந்து பிரிப்பதற்கு பிலிப்பைன்ஸ் பணிப்பெண் சூனியம் செய்ததாகவும் சந்தேகித்தே பணிப் பெண்னை குவைத் நாட்டு பெண் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். சூடான அயன்பாக்ஸ் மற்றும் கரண்டி போன்றவற்றால் பணிப்பெண்ணின் தலை மற்றும் மார்பு உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதை காரணமாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை கணவனும் மனைவியும் வேண்டுமென்றே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து வந்துள்ளனர். பிறகு சட்டச் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.