நூருல் ஹுதா உமர்
மாகாண சபையினால் உள்ளுராட்சி மன்றங்களை பலப்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளூர் வளர்ச்சி ஆதரவு (Local Development Support Project -LDSP) திட்டத்தில் கல்முனை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடலின் போது உள்வாங்கப்பட்ட கல்முனை, திட்டம் அமுல்படுத்தப்பட்ட போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தலையிடுமாறு பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட மாநகரத்தை ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சகல உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையிலும் பேசினேன். எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள். மாநகரசபையினால் வரி அறவிடுவதில் மட்டுமே கல்முனைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. அபிவிருத்தி சார்ந்த எல்லா விடயங்களிலும் கல்முனை புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் தெரிவித்தார்.
இன்று (13) அவரது காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கல்முனை மாநகரசபையினால் திட்டத்தின் ஆரம்பத்தில் சாய்ந்தமருத்துக்கு பாலமொன்றும் மருதமுனை மற்றும் கல்முனைக்கு தலா ஒரு கலாச்சார மண்டபமும் தமிழ் மக்களுக்கான ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்திக்கும் என கலந்துரையாடல்கள் நடைபெற்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களின் முதல்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கல்முனை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர ஏனைய பிரதேச மக்களின் ஒற்றுகூடல்கள், நிகழ்வுகளை நடத்த வாசிகசாலை மண்டபம், மக்கள் மண்டபம் என்றும் இன்னோரென்ன பெயர்களிலும் பொது மற்றும் தனியார் மண்டபங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. ஆனால் கல்முனையில் ஆபத்திற்கு ஒதுங்கக்கூட ஒரு இடமில்லை என்பதை எல்லோரும் அறிவர். இறுதியாக பிரதேச செயலக நில ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அது மருதமுனைக்கு கைநழுவி போகியுள்ளது. 2021 இல் மீண்டும் அந்த திட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் கல்முனை புறக்கணிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகரில் கலாச்சார மண்டபமொன்றை கட்ட கல்முனையை சேர்ந்த சகல மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துரையாடி கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டோம். அந்த திட்டங்களில் தொடர்ச்சியாக கல்முனை புறக்கணிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக உள்ளது.
இது தொடர்பில் கடந்த 2021 டிசம்பர் மாத மாநகரசபை அமர்வில் கேள்வியெழுப்பினேன். 2022 இல் கல்முனைக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது ஏனைய மூன்று ஊர்களுக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வேலைகள் நடக்கிறது. கல்முனையில் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி கல்முனைக்கு நீதி பெற்றுத்தர முன்வர வேண்டும் என்றார்.