நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது கணவன் மனைவி இருவருக்கும் குறைபாடுள்ள ஜீன்கள் இருந்தால் அவர்களுக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு குறைபாடுள்ள இரண்டு மரபணுக்கள் இருக்கும்.
ராஜேஸ்வரியும், செந்திலும் அன்று என்னை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். இருவருக்கும் அடுத்த வருடம் திருமணம் முடிவாகியிருந்தது. இருவரும் நன்கு படித்தவர்கள் கணினித்துறையில் தகுதியான வேலையில் இருப்பவர்கள்.
இருவரிடமும் பேசியதிலிருந்து ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பது புரித்தது. பிறகு இவர்களுக்கு என்னதான் பிரச்சனை?
இருவரும் சிறு வயதிலிருந்தே அறிமுகமானவர்கள்.
ஒருவருக்கொருவர் உறவினர் என்பதுதான் சிக்கல்!.
அத்தை மகள், மாமன் மகன்.
நண்பர்களிடம் பேசியதிலும், இணையத்திலும் கிடைத்த தகவல்கள் சொந்தத்தில் திருமணம் செய்தால், குறையுள்ள குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றன. அதனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது சரியா?! தவறா?! என்பது தான் அவர்கள் மனதில் உள்ள குழப்பம்.
இது நியாயமான குழப்பம் தான் .
இந்தக் கருத்து உண்மைதான். சொந்தத்தில் திருமணம் செய்தால், குறையுள்ள குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் பிறக்கும் குறையுள்ள குழந்தைகள் எல்லாமே சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு மட்டுமேயா பிறக்கின்றன? இல்லை உறவில் திருமணம் செய்தவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பது இல்லையா?
நம் தாய் தந்தையிடமிருந்து மற்றும் முன்னோர்கள் அம்மா வழி அப்பா வழி அத்தை மாமா பாட்டி என்று எல்லோரிடமும் உள்ள நல்ல குணங்கள் மரபு கீற்றுகளில் (chromosomes), உள்ள மரபணுக்களில் (genes)பதிக்கப்பட்டு நமக்கு கடத்தப்படுகிறது. அதுபோலவே குறைபாடுகளை தாங்கி இருப்பவையும் கடத்தப்படுகின்றன.
பெண்குயின் கார்னர் 8 : திருமண சமயத்தில் மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுக்கலாமா..? மருத்துவர் விளக்கம்
பொதுவாக எல்லா மரபியல் குணங்களும் 2 ஜீன்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒன்று தாயிடமிருந்தும் ஒன்று தந்தையிடமிருந்தும் பெறப்பட்டிருக்கும். பெரும்பாலான குறைபாடு உள்ள ஜீன் ஒன்று மட்டும் இருந்தால் நோயை தோற்றுவிக்கும் அளவுக்கு சக்தியோடு இருக்காது. இதை அடங்கிய மரபணு (recessive gene) என்றும் , அதை உடையவர்களை கேரியர்(carrier) என்றும் அழைப்பர்.
ஆனால் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது கணவன் மனைவி இருவருக்கும் அதுபோன்ற குறைபாடுள்ள ஜீன்கள் இருந்தால் அவர்களுக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு குறைபாடுள்ள இரண்டு மரபணுக்கள் இருக்கும். அவ்வாறு உருவாகும் குழந்தைக்கு பிறப்பிலேயே குறைபாடுகள் உண்டாக வாய்ப்பு உண்டு.
இந்த பிரச்சனைக்காக தான் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவர். குறிப்பாக வலிப்பு நோய் இருதய நோய்கள் ரத்த நோய்கள், எலும்பு நோய்கள், புற்றுநோய், மனநோய்கள் போன்றவை இவ்வாறு மரபியல் ரீதியாக வருவதற்கான வாய்ப்பு இருக்கும்.
இப்போது செந்தில் மற்றும் ராஜேஸ்வரி விஷயத்தில் என்ன செய்யலாம்?
முன்பு அளவுக்கு இப்பொழுது இல்லை என்றாலும் இன்னும் கிராமங்களில் சொந்த தாய்மாமனை திருமணம் செய்து கொள்வது வழக்கம் இருக்கிறது.
பெண்குயின் கார்னர் 7 : கொரோனா குணமடைந்த பின் எத்தனை நாட்கள் கழித்து திருமணம் செய்வது சரி..?
மிக நெருங்கிய சொந்தமான, தாயின் சகோதரனான தாய்மாமனை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
பொதுவாக மூன்று தலைமுறை வரை எந்த விதமான நோய்களும் அந்த குடும்பத்தில் இல்லை என்பது உறுதியாக தெரிந்தால் சொந்தத்தில் திருமணம் செய்வதில் தவறில்லை.
நிறைய குடும்பங்களில் சொத்துக்காக குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குள் மட்டுமே மீண்டும் மீண்டும் திருமணம் செய்வார்கள். அவ்வாறு செய்யப்படும் குடும்பங்களில் இது போன்ற குறையுள்ள குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
அதுவே செந்தில் ராஜேஸ்வரி இருவரும் அவர்களுடைய குடும்பங்களின் மூதாதையர்களின் வரலாறுகளை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து ஏதேனும் குறைபாடு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மூன்று தலை முறைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளவர்கள் பிறந்து இருக்கிறார்களா? அதிக அளவு கருச்சிதைவுகள் , குழந்தை பிறந்து இறத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்து இருக்கிறதா? என்பதை கண்டறிய வேண்டும். எ
அந்த அளவுக்கு அவர்கள் இருவர் குடும்பங்களுக்குள்ளும் முந்தைய திருமண உறவுகள் இருந்திருக்கின்றன? போன்ற விவரங்களை சேகரித்து, இதற்குரிய சிறப்பு மரபியல் அறிஞர்களிடம் (geneticist ) ஆலோசனையைப் பெறுதல் சரியாக இருக்கும். ஏதேனும் நோய்களோ குறைபாடுகளோ பிறக்கும் குழந்தைக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டா? என்பதும் தெரியும்.
இருவரும் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டனர்.
இப்பொழுதுள்ள இளம் தலைமுறையினரின் புத்திசாலித்தனத்தை பார்த்து மனதில் மகிழ்ச்சி.
வளமான வருங்காலத்திற்கு என் வாழ்த்துகள்...