மகன் பிறக்கவில்லையே என்ற கோவத்தில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
உலகம் முழுக்க பெண்களின் பெருமைகளைப் போற்றும் விதமாக மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறது. பெண் என்பவள் எப்படிப்பட்ட மேன்மையானவள், ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என பல்வேறுபட்ட துறைகளில் வென்ற பெண்களை முன்னுதாரணம் காட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
முன்பைவிட பெண் சிசுக்கொலைகள் குறைந்துள்ள போதும், இப்போதும் ஆண் குழந்தைகள் தான் உயர்ந்தவை என்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த எண்ணம் வெறியாக மாறி, ஒரு கட்டத்தில் மனசாட்சியே இல்லாமல் பெற்ற மகளைக் கொல்லும் அளவிற்கு கொடூரர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பாகிஸ்தானில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாசெப். தனது மனைவி கர்ப்பமாக ஆனதில் இருந்தே, தனது முதல் குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார் ஷாசெப். ஆனால், அவருக்கு கடந்த வாரம் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது தனது ரத்தம் என எடுத்துக் கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை போலும்.
குழந்தை பிறந்த நாளில் இருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார் ஷாசெப். பிறந்த குழந்தையை கவனிக்காமல் இருந்து வந்த அவர், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிறந்து ஏழு நாட்களே ஆன அக்குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அதுவும் ஒருமுறையல்ல ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் கொடூரமாகச் சுட்டுக் கொன்ற அந்த தந்தையை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மாகாண ஐஜி உத்தரவிட்டுள்ளார். மகன் பிறக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் இப்படி ஒரு பாதகச் செயலை ஷாசெப் செய்துள்ளதாக போலீசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த அக்குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை சுட்டுக் கொல்ல எப்படி மனது வந்தது அந்த கல்நெஞ்சம் கொண்ட தந்தைக்கு என ஷாசெப்பை திட்டி, தங்களது அனுதாபங்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் அந்த கொடூர தந்தைக்கு பெரிய தண்டனையாக தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.