Ads Area

மீண்டும் பாலமுனை, முள்ளிமலைக்கு படையெடுக்கும் தேரர் குழு - எதிர்ப்பினால் திரும்பிச்சென்றனர். Palamunai

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

பாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு  மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த நிலையில், தகவலறிந்து அப்பகுதி வாழ் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை ஒன்று கூடியதனால் மீண்டும் திரும்பிச்சென்றனர்.

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை, முள்ளிமலை பிரதேசத்திலுள்ள காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியெனத் தெரிவித்து பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்கள் சிலரும் கடும் பாதுகாப்புடன் சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு தகவலறிந்து அங்கு சென்ற அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தேரர் தலைமையிலான குழு திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மீண்டும் தேரர் தலைமையில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குழுவொன்று அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தது.

மீண்டும் தேரர் குழு வந்த தகவலையடுத்து அவ்விடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

இதே வேளை, இவ்விடயம் தொடர்பில் சுமூகமான பேச்சுவார்த்தையில் கடந்த மார்ச் 9ம் திகதி புதன்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம.ஏ.டக்லஸ்  ஈடுபட்டிருந்தார். 

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாலமுனை முள்ளிமலை விவகாரம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மேற்குறித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்ட கல்வெட்டுக்களும் நடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe