நூருல் ஹுதா உமர்
நவீன தொழிநுட்பத்துறையில் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பிரதேச சபையினுடைய சேவைகளையும் நவீன மயப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக முகநூலினூடாக முறைப்பாடுகளைப் பெற்று விரைவாக தீர்வுகளை வழங்கும் திட்டம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரினால் நிந்தவூர் பிரதேச சபையின் அழைப்பு மையத்தில் நேற்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று முதல் நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தெருமின்விளக்கு திருத்தம், திண்மக்கழிவகற்றல், வடிகாலமைப்பு துப்பரவு போன்ற முக்கியமான அன்றாட முறைப்பாடுகளை Pradheshiya Sabah - Nintavur எனும் முகநூல் பக்கத்தின் முறைப்பாட்டு பிரிவில் பதிவு செய்து உடன் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். பதிவு செய்யப்படுகின்ற முறைப்பாடுகளை ஆவணப்படுத்தும் வகையில் உங்களிடம் கோரப்படுகின்ற தகவல்களை வழங்கி இலகுவாக தீர்வினை பெற்றுக் கொள்ளமுடியும்.
எனவே இச்சேவையினை நிந்தவூர் பொதுமக்களாகிய நீங்கள் மிகவும் நாகரிகமான முறையில் பயன்படுத்தி பிரதேச சபையினூடான சேவையினை இலகுவாகப் பெற்றுக் கொள்வதுடன் இப்பிராந்தியத்தின் முன்மாதிரியான உள்ளூராட்சிமன்றங்களில் ஒன்றாக நிந்தவூர் பிரதேச சபையை திகழ்ந்திட செய்ய முடியுமென தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹீர் தெரிவித்தார்.