Ads Area

சண்முகா வித்தியாலய முஸ்லிம் மாணவிகளின் ஆடை விவகாரம் - ஜனாதிபதி செயலகம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம்.

 


நூருள் ஹுதா உமர்

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் மாணவிகளின் ஆடை விடயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

திருகோணமலை சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாவினையும் காட் சட்டையினையும் கழற்றி வைத்துவிட்டே வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவதாக திருகோணமலை கள விஜயத்தின் போது கிழக்கின் கேடயத்தினர் அறிந்துகொண்டதாகவும் இதுதொடர்பில் உண்மைத்தன்மையினை கண்டறிந்து தவறு இழைத்தவர்களுக்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கிழக்கின் கேடயம் சார்பில் தலைவர் எஸ் எம் சபீஸ் கையெழுத்திட்ட எழுத்துமூல கடிதம் ஜனாதிபதி, கல்வியமைச்சர், ஆளுநர், மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், திருகோணமலை சண்முகா பாடசாலை அதிபர் போன்றோருக்கு கடந்த மாதம் நடுப்பகுதியில் அனுப்பப்பட்டிருந்தது. 

அக்கடிதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கிலையே மேற்படி கடிதம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ். எம். சபீஸ், 

இப்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருப்பவர் ஒரு பெண். அவருக்கு சகல இனங்களினதும் பெண்களின் ஆடை கலாச்சாரம் பற்றி நன்றாக தெரியும் என நம்புகிறோம். பக்கசார்பில்லாத, நடுநிலையுடன் கூடிய விசாரணையை  மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவார்  நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த ஆடை விவகாரம் தொடர்பில் திருகோணமலை சண்முகா வித்தியாலய முஸ்லிம் மாணவிகளின் கருத்துக்களை சேகரித்து  வைத்துள்ளோம். இலங்கை பிரஜைகளுக்கு அரசின் சட்டத்தினூடாக  உறுதிப்படுத்திய அடிப்படை மனித உரிமையை மலினப்படுத்தி கேள்விக்குட்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe