நூருள் ஹுதா உமர்.
முஸ்லிம் திருமண சட்டத்தில் எதையும் நீக்க வேண்டாம் என எவரும் சொல்லவில்லை என்பதால் இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் ஐரோப்பிய சக்திகளின் பணம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். முஸ்லிம் திருமண சட்டத்தில் உள்ள எதையும் நீக்க கூடாது என்று சொல்ல வைக்க இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோரால் முடியுமா என சவால் விடுகிறோம் என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத்
இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், முஸ்லிம் திருமண சட்டம் முழுமையாக ஒழிக்கப்படாமல் திருத்தப்படவேண்டும் என அண்மையில் பெண்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய அரசு ஜனநாயகத்தை மதிக்கும் அரசு என்பது இந்த ஆர்ப்பாட்டம் எந்த இடையூறுமின்றி நடந்ததன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
எமது கட்சியை பொறுத்தவரை முஸ்லிம் திருமண சட்டத்தில் எதையும் நீக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அன்று ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்பட வேண்டும், காழி மன்றம் ஒழிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய பணத்துக்கும் சொகுசுக்கும் அடிமையான சில முஸ்லிம் பெண்கள் மாற்று மத பெண்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, அதற்கு ஹக்கீம் ஆதரவு தெரிவித்த போது முஸ்லிம் பெண்களும் அமைப்புக்களும் வீதிக்கு இறங்கி அந்த பெண்களுக்கும் அவர்களின் தாளத்துக்கு ஆடும் ஹக்கீமுக்கும் எதிராக இறங்கியிருந்தால் இப்பிரச்சினை வளர்ந்திருக்காது.
அப்போது முஸ்லிம் சமூகமும் பெண்களும் ஹக்கீமுக்கு பயந்து ஒடுங்கியிருந்தனர். அன்று உலமா கட்சி (இன்றைய ஐக்கிய காங்கிரஸ்) மட்டுமே முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது என்று பகிரங்கமாக சொல்லியது. அப்போது தூங்கியிருந்த சமூகம் இப்போது மிக தாமதமாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனாலும் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்றே இவர்களின் ஆர்ப்பாட்டம் இருந்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.
திருத்தப்போனால் எதை திருத்துவது என்ற இழுபறியும் முழு சட்டமும் இல்லாமல் போகும் என்பதை அன்று முதல் நாம் எச்சரிக்கிறோம். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுமத பெண்கள் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என சொல்வதன் மூலம் இவர்கள் மேற்படி திருமண சட்டத்தை கேவலப்படுத்த முனைந்துள்ளனர் என தெரிவித்தார்.