இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த இரு தினங்களில் தீர்வு காணப்படும் என புதிய எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காமினி லொகுகே உறுதியளித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எரிபொருளை பெற்று விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாளை (09) அல்லது நாளை மறுதினம் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
விநியோகத்தைத் தொடர்ந்து, எரிபொருள் வரிசைகள் நாளை அல்லது வியாழன் (10) உடன் முற்றாக முடிவடையும் என்று அமைச்சர் லொகுகே மேலும் தெரிவித்தார்.
உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.
28,300 மெற்றிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் நேற்றைய தினம் இலங்கை வந்துள்ளதாகவும், எரிபொருள் இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி இன்னும் இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.