முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை அடுத்து தமிழ்நாட்டில் பிரபல லூலூ குரூப் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார்.
துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . இன்றும் முதல்வர் ஸ்டாலின் துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
guidance தமிழ்நாடு என்ற பெயரில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன்படி மொத்தமாக 1600 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. துபாயை சேர்ந்த இந்தியர்களின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எந்த மாவட்டத்தில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், பழங்கள், காய்கறிகளை ஏற்றுமதி செய்யவும் இந்த உணவு பதப்படுத்தும் நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்படும். துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இந்த உணவு பொருட்கள் அனுப்பப்படும். இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து இவ்வளவு பெரிய முதலீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட், மால், ஏற்றுமதி, இறக்குமதி, வங்கி முதலீடு என்று பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலும் தற்போது கேரளா மற்றும் பெங்களூரில் பல்வேறு சூப்பர் மார்க்கெட், மால்களை திறந்து முதலீடுகளை செய்து வருகிறது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனலின் யூசுப் அலி கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் பல்வேறு வங்கிகளில் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அங்கு திருவனந்தபுரம், கொச்சியில் அந்த நிறுவனத்தின் இரண்டு பெரிய மால்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் இரண்டு மால்களை அமைக்க இந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மொத்தமாக மால்கள் மற்றும் உணவு பதனிடும் அமைப்பு சேர்த்து தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.