பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கான புதிய அம்புயுலன்ஸ் வாகனம் வழங்குதல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உணவு மண்டபம், மோட்டார் சைக்கிள் தரிப்பிடம் ஆகியவற்றை வைபவரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று 9.3.2022 இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் TSRTR ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி JJ முரளிதரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ILM றிபாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு புதிய அம்புயுலன்ஸ் வாகனம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி JJ முரளிதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், உணவு மண்டபம், மோட்டார் சைக்கிள் தரிப்பிடம் ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதிகள் மற்றும் கெளரவ அதிதிகள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களின் முயற்சியினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அண்மையில் Type A ஆக தரமுயர்த்தப்பட்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கை தொடர்ந்தும் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.