Ads Area

சம்மாந்துறையில் பொதுமக்கள் சமயல் எரிவாயுவை பெற நீண்ட வரிசையில் நின்றும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேசத்தில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு இன்று காலை 08 மணி முதல் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சமையல் எரிவாயு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வழங்கப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே பொது மக்கள் அங்கு பி.ப 2.00 மணிவரை காத்திருந்தனர். 

ஆயினும், சமையல் எரிவாயு இன்றைய நாளில் வழங்கப்படமாட்டாது என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச் ஜெயலத் மக்களிடம் தெரிவித்தமையை தொடர்ந்து அங்கிருந்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொது மக்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையால் செல்லும் வீதி ஓரத்தில் சிலிண்டர்களை வரிசையாக அடுக்கி வைத்து 2.00 மணிவரையும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 சமையல் எரிவாயு வழங்கப்படுவதற்குரிய ஏற்பாட்டை சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தினர் செய்தாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிகமாக காத்திருந்த பொது மக்களின் பரிதாப நிலையை கருத்திற் கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமையல் எரிவாயு வழங்கும் முகவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்மாந்துறை மக்களுக்கு வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயுவை வேறு ஓர் இடத்தில் தற்செயலாக வழங்க வேண்டி ஏற்பட்டதாகவும், சம்மாந்துறை மக்களுக்கு பிரிதொரு தினத்திற் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் குறித்த முகவர் தெரிவித்ததாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொது மக்களிடம் நேரடியாக வந்து தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சிறுவர்கள், பெரியவர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் திரண்டு இருந்தனர்.

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்த இரண்டு சிறுவர்கள் (சகோதரர்கள்) ஏமாற்றத்துடன் சிலிண்டரை தூக்க இயலாது ஆளுக்கொரு பக்கமாக நீண்ட நேரம் தூக்கிக் கொண்டு சென்றதை எம்மால் காணக் கூடியதாக இருந்தது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe