Ads Area

காலியில் எரிபொருள் பெற வந்த கணவர் மரணம் - மரணித்த கணவரை கட்டியணைத்து அழும் மனைவி.

காலியில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (11) அதிகாலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் டீசல் பெறுவதற்காக காலி, தவலம, ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது லொறிக்கு டீசல் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றுள்ளார்.

அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அனுமதிக்கப்பட்ட பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் காலி, ஹபரகட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்ற மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொடுவ - நீர்கொழும்பு வீதியில் தங்கொடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சனிக்கிழமை (09) வந்திருந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது பேருந்திற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது, ​​திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அந்த நபர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், தங்கொடுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அவர் கோனவில பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) வென்னப்புவ, வாய்க்கால் பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்த சில நிமிடங்களில் கார் சாரதி தனது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் எரிபொருளை கொள்வனவு செய்து தனது காரில் ஏறக்குறைய 10 மீற்றர் தூரத்தை செலுத்திய பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe