(எச்.எம்.எம்.பர்ஸான்)
37 வருட கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ள வாழைச்சேனை பரீட் அதிபருக்கு மகத்தான கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்றுச்செல்லும் இவருக்கு மாலை அணிவித்து, முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பக்கீர் இசைக்கப்பட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் கண்ணீர் மல்க வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திலிருந்து அவரது வீடு வரை ஊர்வலாமாக அழைத்துச்சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
இவர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 13 வருடங்கள் அதிபராக சேவையாற்றி அப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
அத்துடன், அரசியல், சமூக சேவைகள், போன்றவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பிரதேசத்திற்கு தன்னாலான பங்களிப்பினைச் செய்துள்ளார்.
பரீட் அதிபரின் கல்விப்பணிக்காக அவரின் ஓய்வை முன்னிட்டு பாடசாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இந்த முன்மாதிரியான நிகழ்வு அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள இவரது சேவையை கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகமட்ட அமைப்பினர்கள், பள்ளிவாயல்கள் நிர்வாகத்தினர்கள் எனப்பலரும் பாராட்டியுள்ளனர்.