தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இலங்கையைச் சேர்ந்த தம்பதிகள் சுமார் 17 வருடங்களாக ஹஜ் மற்றும் உம்ராவுக்காக மக்கா வரும் யாத்தீரிகர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருவதாக சவுதி அரேபியாவில் உள்ள பிலபல இணைத்தளம் அவர்களைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
புனித மக்கா பள்ளிவாசலில் பணியமர்த்தப்பட்டுள்ள 12,000 ஊழியர்களில் இலங்கையைச் சேர்ந்த அஷ்ரஃப் மற்றும் பாத்திமா தம்பதியினர் அடங்குவர். இவர்கள் இருவரம் சுமார் 17 வருடங்களாக புனித மக்காவில் வேலை செய்து அங்கு உம்ரா மற்றும் ஹஜ் கிரியைகளுக்காக வருகை தரும் யாத்திரீகர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
தங்களது வாழ்வாதார தேவையினை பூர்த்தி செய்வதற்கும் அல்லாஹ்வின் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காகவும் கணவன்-மனைவியாகிய தாங்கள் இருவரும் புனித மக்காவில் வேலை செய்வது தங்களுக்கு மன நிம்மதியைத் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமா மக்கா பள்ளிவாசலில் தனியாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அங்கு பாத்திமாவுக்கு பெண்களின் தொழுகைப் பகுதிகள் மற்றும் அங்கு விரிக்கப்பட்டிருக்கும் தொழுகை விரிப்புகளை சுத்தம் செய்யும் மற்றும் பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டிருந்தது. நான்கு வருடங்கள் புனித மக்கா ஹரமில் தனியாக வேலை செய்த பாத்திமா பின்னர் மக்கா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் இலங்கையில் உள்ள தனது கணவரையும் இங்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து பணிபுரிய கோரிக்கை விடுத்திருந்தார் அந்தக் கோரிக்கையை ஏற்ற மக்கா பள்ளிவாசல் நிர்வாகம் பாத்திமாவின் கணவரையும் இலங்கையிலிருந்து வர ஏற்பாடு செய்து அவரையும் பாத்திமாவோடு பணிக்கு அமர்த்தியது.
சுமார் 17 வருடங்களாக அஷ்ரப்-பாத்திமா தம்பதிகள் புனித மக்காவில் இரவு பகலாக அங்கு வரும் யாத்திரிகர்களுக்கு சேவை புரிந்து வருவதாக அவர்களை பாராட்டி சவுதி அரேபிய பிரபல இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.