நூருள் ஹுதா உமர்
கல்முனை வடக்கு பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் டெங்கை ஒழிக்கும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக கல்முனை மாநகர சபை எதுவித ஒத்துழைப்பும் நல்காமல் இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் சூழ்நிலை மற்றும் சுகாதார நிலை மோசமாக உள்ள இந்த காலகட்டத்தில் கல்முனை மாநகர சபை பல்வேறு முரண்பாடு நிலை காரணமாக மக்கள் நல திட்டங்களை செய்வதில் அக்கறை காட்டாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கல்முனை மாநகர சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவியபோது, மாநகர சபை சுகாதார பிரிவினரால் செய்யப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வளப்பற்றக்குறை காரணமாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரினால் செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டதாகவும் அதற்கான எரிபொருளை கல்முனை மாநகர சபை வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இருந்த போதிலும் கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவினால் எரிபொருள் ஆணை ஏற்கனவே வழங்கப்பட்டும் கல்முனை முதல்வர் காரியாலயத்திலிருந்து எரிபொருள் ஆணை விநியோகிக்கப்படாமல் தடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வாறான பொறுப்புணர்ச்சி அற்ற செயற்பாடுகளினால் ஏற்படும் நோய் நிலை அசௌகரியங்கள், டெங்கு மரணங்களுக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் பொறுபேற்பாரா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.