2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடாத்திய சஹ்ரான் ஹாசிமின் சொகுசு வாகனத்தை தான் பயன்படுத்தியதாக வெளியான தகவலை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அவ்வாறான எந்தவொரு வாகனத்தையும் தான் பயன்படுத்தவில்லை என விளக்கமளித்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதை அடுத்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, சஹ்ரான் ஹாஷிமின் Toyota Land Cruiser V8 தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் பயன்படுத்தப்படுவதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாதி ஒருவரின் வாகனத்தை அரசியல்வாதியொருவர் பயன்படுத்த முடியுமா என்ற ஊடகவியலாளரின் கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இவ்விடயம் தொடர்பில் தான் அறிந்தவுடன் அது தொடர்பில் அமைச்சின் செயலாளரிடம் வினவியதாகவும், இந்த வாகனம் அரச சொத்தாக இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தமக்கு அறிவித்ததாகவும், பொலிஸ் திணைக்களம் வாகனத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் (STF) ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வாகனம் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை, மாறாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்படும் சேவை வாகனங்களில் இது உள்ளடங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சொகுசு வாகனத்தை தான் எந்த காலத்திலும் பயன்படுத்தவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.