சுனாமி அனர்த்தங்களின்போது வெளிவந்த கவிதைகளில் இலக்கிய நயம், சொல்லாடல், மரபிலக்கணம் என்பவற்றோடு யதார்த்தமான என்னைக் கவர்ந்த கவிதை அஸ்மினின் "உலகக் கோப்பையை வென்ற சுனாமி" ஆகும். காலத்தோடு பயணிக்கும் முன்வரிசை கவிஞர்களில் ஒருவராக பொத்துவில் அஸ்மினை குறிப்பிடுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள "வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க" என ஆரம்பிக்கும் பாடல் அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அலை இலங்கையின் அரசியலை தடம்புரட்டி சுனாமியாக பரிணாமம் பெற்றுள்ள நேரத்தில், அஸ்மின் தனது துறைசார்ந்து அதனை சர்வதேச மையப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
அஸ்மினின் வழமையான பாணியிலிருந்து மாறுபட்ட இப்பாடலின் இலக்கியத் தரத்தை சிலர் விமர்சித்திருந்தாலும் மக்கள் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த அஸ்மின் தேர்ந்தெடுத்தவர் தமிழக திரையுலக பிரபலமான நண்பர் ரி. ராஜேந்தர் என்பதால், அவருக்கே உரித்தான வசன நடையில் எழுதப்பட்ட அந்தப் பாடலில் குறை காண்பது பொருத்தமற்றது.
சிங்கள இலக்கியவாதிகள் பெரும் ஆர்வத்தோடு காலிமுகத்திடல் கடற்கரை தொடர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் களத்தில் நிற்கும் தமிழ்பேசும் சமூகத்தின் சார்பாக அஸ்மின் வழங்கியிருக்கும் இந்தப் பங்களிப்பு மிகப் பெறுமதியானது.
எமது பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர், 2001ஆம் ஆண்டு "அரசியல் வானில் அஷ்ரஃப் எனும் விடிவெள்ளி" என்கிற தலைப்பில் அஸ்மின் எழுதிய கவிதை முதற்பரிசை வென்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கைகளால், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த நினைவேந்தல் பெருவிழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் அபிமானியான அஸ்மின், 2006 உள்ளூராட்சி தேர்தலில் எமது வேட்பாளராக களமிறங்கியதோடு எனது தலைமையில் மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு சென்ற குழுவின் நட்சத்திர கவிஞராக 2011இல் முத்திரை பதித்தவருமாவார். அவரது "பாம்புகள் குளிக்கும் நதி" நூல் வெளியீட்டுக்கு 2013இல் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று மேலும் தெரிவித்தார்.