Ads Area

பூச்சியங்களை நீக்க வேண்டிய நிலைக்கு (Redenomination) இலங்கை நாணயங்களை கொண்டு செல்லுமா எமது நாட்டின் பண வீக்கம்?

Freddy Abraham

சோமாலிய நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட ஆரம்ப கால கட்டங்களில், 1991 ஆம் ஆண்டு அந்த நாட்டிலிருந்து பிரிந்து சென்று தன்னை ஒரு தனிநாடாக அறிவித்துக் கொண்டதுதான் இன்றைய சோமாலிலாந்து. தனிநாடாக பிரகடனப் படுத்திக்கொண்டாலும் இன்று வரை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப் படாமல் இயங்கி வருகிறது.

சோமாலிலாந்து ஆரம்ப காலங்களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக போரிற்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய பணத்தை அச்சிட்டு வந்தாலும், அதன் பின்னர் பல அரசியல் நோக்கங்களுக்காகவும் பணத்தை தொடர்ந்து அச்சிட்டு வர பணத்தின் பெறுமதியும் அங்கு குறைந்து கொண்டே வந்தது.

இது 500 மற்றும் 1,000 என்கிற உயர் பெறுமதி கொண்ட நாணயத் தாள்களை மட்டுமே கொண்ட சோமாலிலாந்தின் ஷில்லிங்க்ஸ் நாணயத்தை பயன்படுத்தும் மக்களுக்கு கடைக்கு சென்று பலசரக்கு வாங்குவதற்கு கூட பெரிய சாக்குப் பைகளில் பணத்தைக் கொண்டு செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளோ, ஏ.டி.எம் களோ இல்லாத சோமாலிலாந்தில் இரண்டு தனியார் நிறுவனங்களால் 2009 இல் அறிமுகப் படுத்தப்பட்ட 'சாட்' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் போன்களின் மூலம் கொடுக்கல் வாங்கல்களை செய்யும் மென்பொருள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

இதனால் இன்று அச்சிடப்படும் பணத்தாள்களின் பயன்பாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்து முழுமையாக எண்ம முறையில் பணத்தைப் (Digital Currency) பயன்படுத்தும் ஒரு நாடாக உலகிற்கு முன்னுதாரணமாக கூறப்படும் அளவிற்கு சோமாலிலாந்து மாற்றமடைந்து உள்ளது.

சோமாலிலாந்து போன்றே வெனிசுவேலா நாட்டிலும் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் ஒரு கிலோ கேரட்டின் விலை 3 மில்லியன் பொலிவ்ர்கள். டொலர்களில் அதன் பெறுமதி வெறும் 0.46 டொலர்கள் மட்டுமே. அதாவது எமது நாட்டின் பெறுமதியில் இன்றைய நாணயமாற்று வீதத்தில் கூட வெறும் 158 ரூபாய்கள்தான். அதுபோல ஒரு கிலோ தக்காளிப் பணத்தின் விலை 5 மில்லியன் பொலிவர்கள்.

ஒரு கிலோ கேரட் விற்பனை செய்பவர் இந்தப் பணத்தினை எண்ணி முடிக்க எடுக்கும் நேரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.

2018 ஜூலையில் வெனிசுலாவின் பணவீக்கம் 82,700% ஆக இருந்தது. அந்த நாட்டில் இருந்த பெரும்பான்மையானோர் நாட்டை விட்டு ஓட எத்தனித்தனர். பலர் பணத்தின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால் பல்வேறு பொருட்களையும் வாங்கி பணத்தை சேமிக்க முயன்றதால் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எம்மவர்கள் வீட்டில் சோப்பு வாங்கிக் குவிப்பதைப் போன்றது இது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மிகைப் பணவீக்கம் ஆகும். இது Hyper Inflation எனப்படுகிறது.

கோட்பாட்டு அளவில் பொருட்களின் விலை என்பது அதன் கேள்வியிலும் வழங்கலின் அளவிலுமே தங்கியிருக்கிறது. பொருகளின் விலை அதிகரிக்கும் பொழுது பண வீக்கம் ஏற்படுகிறது என்பது போல, பொருட்களின் விலை வீழ்ச்சியடையும்பொழுது பண வாட்டம் ஏற்படுகிறது. இது Deflation எனப்படுகிறது.

பண வீக்கமோ, பண வாட்டமோ சமூகத்தின் ஒரு பகுதியினரை மோசமாகப் பாதிக்கிறது என்பதே உண்மை.

எமது நாட்டின் நிலை தொடர்பில் நாம் இங்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பண வீக்கம் (Inflation) தொடர்பில் ஆகும். பண வீக்கம் என்பது அச்சிடப்பட்ட நாணயத் தாள்களின் அளவு பொருட்கள் சேவைகளுக்கான கேள்வியை விஞ்சும்போதே நிகழ்கிறது. இதனால் நாணயங்களின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக அரசாங்கங்கள் தங்கள் வருமானத்திற்கும் மீறி செலவுகளை சமாளிக்கும் வகையில் நாணயங்களை அச்சிடும்பொழுதே பணவீக்கம் ஏற்படுகிறது.

பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பதுடன், பணத்தின் பெறுமதியும் அபரிமிதமாக வீழ்ச்சியடைந்து அன்றாடத் தேவைக்கான பொருட்களை வாங்கவும் பெரிய சாக்குப் பைகளில் பணத்தைக் கொண்டு போகுமளவுக்கு பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைவது மிகைப் பணவீக்கம் (Hyper Inflation) எனப்படுகிறது.

வரலாற்றில் மிகைப் பணவீக்கத்திற்கு சிறப்பான உதாரணங்கள் உண்டு.

1923 இல் ஜெர்மனியின் வெய்மர் குடியரசில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 4 டிரில்லியன் ஜெர்மன் மார்க்ஸ் நாணயங்களாக இருந்தது. அப்போது அங்கு அச்சிடப்பட்ட மார்க்ஸ் நாணயத்தின் ஆகக் கூடிய பெறுமதி 100 டிரில்லியன் மார்க்ஸ் (100,000,000,000,000) ஆகும். எமது நாட்டில் ஆகக் கூடிய பெறுமதி கொண்ட நாணயம் 5,000 ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் இதுவரை வெளியிடப்பட்ட நாணயத் தாளின் ஆகக்கூடிய பெறுமதி ஹங்கேரி நாட்டில் 1946 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 100 குவின்டில்லியன் பெங்கோ (100,000,000,000,000,000,000) நாணயத் தாள் ஆகும்.

உலகின் அதிகூடிய பணவீக்கமாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 1946 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பதிவான 41.9 குவாட்ரில்லியன் வீதமே (41,900,000,000,000,000%) காணப்படுகிறது. அப்பொழுது பொருட்களின் விலைகள் ஒவ்வொரு 15.3 மணித்தியாலத்திற்கும் இரண்டு மடங்காக அதிகரித்தது.

14 நவம்பர் 2008 இல் சிம்பாப்வேயின் வருடாந்த பணவீக்கம் 89.7 செக்ஸ்டில்லியன் வீதமாக (89,700,000,000,000,000,000,000%) இருந்தது. அந்தக் காலப்பகுதியில் அதிகூடிய மாதாந்த பணவீக்கமாக 79.6 பில்லியன் வீதம் (79,600,000,000%) பதிவானது.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் உண்டு.

ஆஸ்திரியா, பொலிவியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனியின் வெய்மர் குடியரசு, கிரீஸ், ஹங்கேரி, மலாயா, வட கொரியா, பெரு, போலந்து, பிலிப்பைன்ஸ், சோவியத் யூனியன், துருக்கி, வெனிசுவேலா, வியட்னாம், யூகோஸ்லேவியா, சிம்பாப்வே என்று இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது.

மிகைப் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் இவ்வாறு வகை தொகையின்றி மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், குவாட்ரில்லியன் என்று அதிகரித்தால் மிகவும் சிறிய அளவுகளில் நாணயத் தாள்களைக் கொண்ட எமது நாட்டில் நிச்சயமாக ஒரு இறாத்தல் பாண் வாங்குவதற்கும் கூட அச்சிட்ட பணத்தை தள்ளு வண்டிகளில் கொண்டு செல்லும் நிலை வரலாம்.

இதுவே சோமாலிலாந்து, வெனிசுவேலா போன்ற நாடுகளில் நடந்தது. ஆனால் இன்று காணப்படும் எண்ம முறைப் பணப்பரிமாற்றம் (Digital Transactions) என்பது பாரிய அளவில் அச்சிடப்பட்ட பணத்தை கையாளவேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்யலாம். இருந்தாலும் கூட இவ்வளவு பாரிய தொகைகளைக் கணக்கிடுதல் என்பது மிகவும் சிரமமான ஒன்று.

உதாரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலை 130 மில்லியன் ரூபாய்கள் என்றால் ஒரு இரவு விருந்திற்கு கொள்வனவு செய்ய வேண்டிய பாண்களின் மொத்தத் தொகைக்கு எத்தனை பூச்சியம் வரும் என்று கணக்குப் பார்க்க உட்கார்ந்தால் மண்டப உரிமையாளருக்கு கிறுக்கு பிடித்து விடும்.

இவ்வாறு பாரிய தொகைகளைக் கையாளுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க அரசுகள் இரண்டு உபாயங்களைக் கையாளுகின்றன. ஒன்று நாணய மாற்றீடை (Currency Substitution) அறிமுகம் செய்கின்றன அல்லது நாணயங்களின் முகப்புப் பெறுமதியைக் குறைக்கும் (Redenomination) உபாயத்தை கையாளுகின்றன.

நாணய மாற்றீடு (Currency Substitution) என்பது பண வீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு தனது சொந்த நாணயத்தைக் கைவிட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இன்னுமொரு நாட்டின் நாணயத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பதைக் குறிக்கிறது. குறிப்பாக ஒரு நாடு டொலரைப் பயன்படுத்த ஆரம்பிப்பதை டொலர் மயமாக்கல் (Dollarization) என்றும் குறிப்பிடுவார்கள். சிம்பாப்வே நாடு நீண்ட காலம் மிகைப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் டொலரை பயன்படுத்த ஆரம்பித்திருந்தது அதற்கு ஒரு உதாரணமாகும். ஆனால் அந்நியச் செலாவணி கையிருப்பு பூச்சியத்தை நெருங்கும் எமது நாட்டிற்கு டொலரை ரூபாய்க்கு மாற்றீடாகப் பயன்படுத்துவது என்பது எட்டாக் கனிதான்.

இவ்வாறு நாணய மாற்றீடை செய்ய முடியாத நாடுகள் புதிய நாணயம் ஒன்றை அறிமுகம் செய்து தங்கள் நாணயங்களின் முகப்புப் பெறுமதிகளை குறைக்கும் (Redenomination) உபாயத்தை கையாளுகின்றன.

வரலாற்றில் இதற்கு உதாரணமாக வெனிசுவேலா நாட்டையே எடுத்துக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்பு வெனிசுவேலா முன்னர் பயன்படுத்திய நாணயத் தாள்களிலிருந்து ஆறு பூச்சியங்களைக் குறைத்து அவற்றிற்கு பதிலாக புதிய நாணயத் தாள்களை அறிமுகப் படுத்தியது. அதாவது பழைய ஒரு மில்லியன் பொலிவர் நாணயத் தாள் ஒன்றை வைத்திருக்கும் ஒருவர் அதனை வங்கியில் ஒப்படைத்து ஒரு பொலிவர் பெறுமதியான புதிய நாணயத் தாள் ஒன்றைப் பெற்றுக் கொள்வார். இங்கு நாணயத்தின் முகப்புப் பெறுமதிலேயே மாற்றம் ஏற்படுமே அன்றி அதன் கொள்வனவுத் திறனில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பெறுமதிக் குறைப்பு என்பது நாணயத் தாள்களுக்கு மட்டுமல்ல வங்கியில் உள்ள நிலுவைகளுக்கும் நிகழும் என்பது குறிப்பிடத் தக்கது.

இதேபோல 2008 ஆம் ஆண்டு சிம்பாப்வே நாடு தனது நாணயத் தாள்களில் 10 பூச்சியங்களை நீக்கி புதிய நாணயத்தினை அறிமுகப் படுத்தி இருந்தது.

இந்த Redenomination என்னும் முறையானது பாரிய தொகைகளைக் கையாளும் சிக்கல்களில் இருந்து மக்களை விடுவிக்கும் என்பதைத் தவிர பண வீக்கத்திலோ, மக்களின் கொள்வனவுத் திறனிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe