Ads Area

அரசியல் நெருக்கடியை நிறைவு செய்ய தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள குறுகிய கால தீர்வுகள்.

நிகழ்கால அரசியல் நெருக்கடியை நிறைவு செய்து நாட்டில் அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தியின் குறுங்கால தீர்வுகள்.

01. நிகழ்கால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.

02. தற்போது பிரதம அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக செயலாற்ற வேண்டும். 

03. நிகழ்கால அரசாங்கமும் நடப்பு பாராளுமன்றத்தின் உள்ளடக்கமும் தொடர்ந்தும் மக்கள் ஆணை கட்டளையை பிரதிநிதித்துவம் செய்யாததால் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளமையாலும் இந்தப் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு மாற்றத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலும் 06 மாதங்களுக்குள் புதிய மக்கள் ஆணை கட்டளையைக் கொண்டதாக அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கான தற்காலிக ஆட்சி கட்டமைப்பு என்ற வகையில்>

அ) நிகழ்கால அரசியல் நெருக்கடி மற்றும் அராஜக நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றதென்பதால் தேசிய மக்கள் சக்தி முதன்மை பொறுப்பினை வகித்து பாராளுமன்றத்தினூடாக தற்காலிக இடைக்கால அரசாங்கமொன்றை எந்தவிதமான தடையுமின்றி நியமித்து கொள்வதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குதல்.

ஆ) அவ்வாறு இல்லாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்காக நிகழ்கால பாராளுமன்றத்தில் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்ளுதல். அதன்போது தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளியாக அமையாமல் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவார்கள். 

04. மேற்படி இரண்டு தீர்வுகளில் ஏதேனும் ஒரு வழியில் நியமிக்கப்படுகின்ற தற்காலிகமான இடைக்கால அரசாங்கம் கீழ் காணும் பணிகளை ஈடேற்ற வேண்டும்.

i. ஜனாதிபதியின் தத்துவங்களை மட்டுப்படுத்துகின்ற மற்றும் நிகழ்கால ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துகின்ற அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். 

ii. நிகழ்காலத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 

iii. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான அரசியல் அமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளல் வேண்டும்.

iv. தற்காலிக அரசாங்கமொன்று நிறுவப்பட்டு 06 மாதக்காலப்பகுதிக்குள் புதிய ஆட்சியொன்றை நிறுவுவதற்கு ஏதுவாக அதற்கான பொதுத் தேர்தலையும் நிகழ்கால ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தையும் உள்ளடக்கியதாக மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்படல் வேண்டும். 

v. தற்காலிக அரசாங்கத்தின் பணிகள் உடன்பட்ட வகையில் இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு சபையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அது நிகழ்கால மக்கள் போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளிட்ட போராட்டத்தின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், பல்வேறு தொழில்வாண்மை அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். 

தேசிய மக்கள் சக்தி

2022 மே 11



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe