பொருளாதார நெருக்கடிகள் அல்லாஹ்வின் சோதனைகள் ஆகும், சமூகமாகவும் தேசமாகவும் அதனை உணர்ந்து சமய சன்மார்க்க வழிகாட்ல்களை அறிந்து அவற்றின்படி ஒழுகுதல் கடமையாகும்.
ஆன்மீக நம்பிக்கைகள் சீர்திருத்தங்களோடு ஹலாலான ஆகுமான தொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவது கடமையும் வணக்க வழிபாடாகவும் இருக்கும்.
அரச தொழிலுக்காக எவரும் காத்திருக்காது ஏதாவது ஒரு சுய தொழிலில் ஈடுபடுங்கள்!
உள்நாட்டில் தொழில் ஆரம்பிக்க மூலதனம் இல்லாதவர்கள் குறுகிய காலமாவது வெளிநாடு சென்று மூலதனத்தை தேடிக் கொண்டு வாருங்கள்.
உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாவிடின், இனியும் தாமதிக்காமல் வெளிநாட்டு தொழில் ஒன்றை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வெளிநாட்டு தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றும் இடைத்தரகர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
வெளிநாடுகளில் தொழில்புரிவோர் நண்பர்கள் உறவினர்களுக்கு தொழில்களை தேடிக் கொடுக்க முன்வாருங்கள், உங்களால் ஓரிரு குடும்பங்கள் வாழும்!
உள்நாட்டில் விவசாயம் கால்நடை வளர்ப்பு மீன்பிடி தொழில்களில் ஆர்வம் காட்டுங்கள்.
இயன்றவரை வீட்டுத் தோட்டங்கள் மொட்டை மாடிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளுங்கள்.
ஏற்றுமதி சிறுதோட்ட பயிர்ச்செய்கைகளில்; மிளகு கராம்பு ஏலம் பட்டை சாதிக்காய் போன்ற பயிர்ச் செய்கைகளில் முடியுமானவர்கள் கவனம் செலுத்துங்கள்.
கிட்டிய எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் கிதுல் பணங் கருப்பட்டி உற்பத்தியில் முடியுமானவர்கள் ஈடுபடலாம்.
அதேபோல் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படலாம் அதற்கான மாற்றீடுகள் அரிசிமா பாவனை கிழங்கு பயறு கடலை வகைகள் குறித்து கவனம் செலுத்தலாம்.
தென்னை பயிர்ச் செய்கை, இளநீர் பயிர்ச் செய்கை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி பயன்பாடு, இளநீர் குளிர்பான தயாரிப்பு காலத்தின் தேவையாகும்.
வீட்டுச் சூழலில் மூலிகைச் செடிகளை அவற்றின் பயன்களை அறிந்து பயிரிட்டுக் கொள்தல் அவசியமாகும்.
இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் உருளைக்கிழங்கு என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம், அவற்றிற்குரிய சுவாத்தியம் உள்ள பிரதேசங்களில் அவற்றை பயிரிடலாம்.
வீட்டுச் சூழலில் மரவள்ளி வற்றாலை கிழங்கு வகைகள் கீரை வகைகளை பயிரிடுதல்!
பழாக்காய் ஈரப்பழாக்காய் போன்றவற்றை பயிரிடுதல் இருப்பவற்றை பயன்படுதல் மற்றும் தேவைக்கு மிஞ்சியவற்றை நியாயமான விலைக்கு விற்றல்.
வாழை மாங்காய் அன்னாசி பப்பாளி உற்பட தத்தமது பிரதேசங்களில் வளரும் பழங்களை உற்பத்தி செய்தல்.
பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமிருக்கிறது, ஆடு பசு வளர்ப்பில் முடியுமானவர்கள் ஈடுபடலாம்.
முட்டையின் விலை ஐம்பது ரூபாய்களைத் தாண்டலாம், வீட்டுச் சூழலில் முடியுமானவர்கள் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம்.
எரிவாயு த்டுப்பாடு ஏற்பட இடமிருக்கிறது உயிரியல் எரிவாயு உற்பத்தியில் கற்ற இளைஞர்கள் ஈடுபட்டு மக்கள் மத்தியில் ஒரு தொழில் முயற்சியாக அறிமுகம் செய்யலாம்.
குறைந்த செலவிலான சூரிய சக்தி பயன்பாட்டை தொழில்நுட்ப அறிவுள்ள மாணவர்கள் தொழில் முயற்சியாக அறிமுகம் செய்யலாம்.
உங்களது அன்றாட தேவைகள் போக மீதமாகும் உற்பத்திகளை அண்டை அயலவருக்கு விற்றல், பண்டமாற்று செய்தல் தர்மமாக கொடுத்தல் மேலதிக வருவாயாக நன்மையாக அமையும்.
ஊரில் உள்ள தரிசு நிலங்கள் அரச காணிகளை அனுமதிகள் பெற்று கூட்டாகவும் தனியாகவும் பயிர்ச் செய்கைகளுக்கு பயன்படுத்துங்கள்.
இயன்றவரை குப்பைகள் கழிவுகளை சேதனப் பசளையாக மாற்றிக் கொள்ளுங்கள், சிலருக்கு அதனை தொழில் முயற்சியாக செய்யலாம்.
பயிர்ச் செய்கைகளுக்கான நாட்டுக்களை வித்துக்களை சேதனப் பசளை போன்றவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தொழில் முயற்சியை சிலர் ஆரம்பிக்கலாம்.
பாடசாலை மஸ்ஜித்கள் மதரஸாக்கள் ஜாமியாக்கள் பல்கலைக்கழகங்கள் என சகல பொது நிறுவன வளாகங்களிலும் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மழைநீரை சேகரித்து பயன்படுத்தும் நுட்பங்களை மக்கள்மத்தியில் அறிமுகம் செய்தல் வேண்டும்.
விவசாய கூட்டுறவு சங்கங்களை, பைதுல்மால் நிதியங்களை, நுண்கடனுதவி திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
அரசாங்கம் விவசாய அமைச்சு கால்நடை அபிவிருத்தி அமைச்சு சமுர்த்தி அமைச்சு என அரச யந்திரங்கள் அறிமுகம் செய்யும் திட்டங்களில் பயன் பெற வேண்டும்!
இளைஞர் மாதர் அமைப்புக்கள், சமூக சேவை நிறுவனங்கள், உள்நாட்டு பிறநாட்டு தொண்டு நிறுவனங்கள் மேற்படி தொழில் மற்றும் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்களுக்கு முன்னுரிமை கொடுப்பது கட்டாயமாகும்.
இறுதியாக நாட்டை அழிவின் விளிம்பிற்கு இட்டுவந்த வங்குரோத்து அரசியல் கலாசாரத்தையும் அதன் காவலர்களையும் ஒழித்து புதிய தலைமுறையினரிடம் தேசத்தை மீள்கட்டுமானம் செய்யும் பணியை ஒப்படைக்க வேண்டும்!
மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் எனது யூடியூப் சேனலை நீங்களும் ஸப்ஸ்கிரைப் செய்து நண்பர்கள் உறவினர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்:
இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
24.05.2022