Ads Area

நான் மக்கள் வங்கியிலிருந்து கடன் பெற்றுக் கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லையா...??

 பாறுக் ஷிஹான்

மக்கள் வங்கியிலிருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் வங்கியிலிருந்து நான் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லையெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி குற்றஞ்சாட்டியிருந்தார். 

அவர் இக்குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன், பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். 

பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கையெடுக்க முடியாது. என்றாலும், ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கெதிராக எனக்கு சட்ட நடவடிக்கையெடுக்க முடியும்.

அத்துடன், இன்று கூட எனது தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கொரோனா காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆடைதொழிற்சாலைகள் இயங்கின.

இங்கு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் எனது நிறுவனத்தில் அதிகமாக வேலை செய்கின்றனர்.

சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பது போல் ஒரு சதமேனும் மக்கள் வங்கியிலிருந்து நான் கடன் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன், நான் எடுத்ததாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிய அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். ஆனால், இவ்வாறான கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனது கெளரவத்தைப் பாதிக்கும் வகையில் என் மீது பெஆய்க்குற்றச்சாட்டை சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக என்னை இவ்வாறு அவர் கூற முடியாதல்லவா? இதற்காக அவருக்கெதிராக உரிய நடவடிக்கையெடுக்கப்படுமென்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அதற்காக என்னை திருடர் எனத்தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் எனத்தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். எனவே, இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe